அன்வர் புதிய அமைச்சரவை
அதிலே தமிழர் யாருமிலை !
தன்றன் முடிவாய்ப் பிரதமரும்
தமிழரை ஒதுக்கக் காரணமென் ?
முன்வந் திந்தக் காரணத்தை
முழுதாய்ச் சொல்ல யாருமிலை !
மின்ன திர்ச்சி வைத்தியத்தை
அன்வர் தமிழர்க்( கு) ஏன்செய்தார் ?
இதுநாள் வரைக்கும் அமைச்சரவை
தமிழர் இன்றி இருந்ததிலை !
மெதுவாய் மெதுவாய்த் தமிழர்களை
வெறுத்த தேனோ அமைச்சரவை ?
பொதுவாய் எதையும் செய்வதுதான்
பொதுக்கொள் கை,அதில் தனியினமாய்
எதையும் பார்க்கும் வழக்கமிலை
என்றே சொல்வார் அன்வாரும் !
இனத்தில் சார்பிலை எனல்சரியே !
இனமே இல்லை எனல்,தகுமா ?
இனமே இல்லை எனில் எந்த
இனத்தார் அமைச்ச ரவையிலுளார் ?
இனத்தார் உள்ளார் எனில் தமிழ
இனமேன் அமைச்ச ரவையிலிலை ?
தனித்த தமிழர் வாக்குகளால்
தழைத்த அன்வர் நோக்கமெதோ ?
கூட இருந்தே குடிகெடுக்கும்
குணத்தார் இழிந்த செயல்போல
ஆடிப் பாடித் தமிழர்களின்
வாக்கை அள்ளிய அன்வரவர்
தேடித் தமிழரை ஒதுக்கியதேன் ?
தேர்வு செய்ய மறந்ததுமேன் ?
வாடச் செய்தே தமிழினத்தை
வருத்தி யதும்தான் ஏன்,ஏன், ஏன் ?
தேர்தல் பரப்புரை யில் அன்வர்
தெளிவாய்த் தமிழர் கூட்டத்தில்
ஆர்வத் துடனே அளித்திட்ட
அல்வா வாக்குகள் என்னாச்சு ?
மார்பில் அடித்தே கேட்கின்றார்
மானம் போன தைப்போலத்
தீர்மா னித்தே குமுறுகிறார் !
தமிழா நீதான் ஏமாளி !
சாணக் கியமிலாக் கோமாளி !
உமிழ்நீர் நீதுப்(பு) உன்மேலே !
உறுத்து மா?மனம் அப்போதும் !
தமிழா இப்படி ஏமாந்தே
சகவாழ் நாளை நீபோக்கு !
தமிழா இதுதான் தலைவிதியா ?
சரியாய் யோசி உன்மதியால் !
*பாதாசன்*