*பல்குத்தப் பயன்படுத்தும்* *குச்சிகளா இந்தியர்கள் !?*

அன்றிருந்த  அரசியலே இங்றே வேறாம் !

      அன்பார்ந்த இந்தியரே சற்றே கேளீர் !

இன்றிருக்கும் அரசியலோ முற்றாய் வேறாம் !

      இந்நிலையை எண்ணாமல் *சிதறு தேங்காய்*

*மென்றுசுவைப் பதைப்போலச்* சமுதா யத்தை

     மெல்கின்றீர் சிறுகட்சி பலவும்  செய்தே !

என்றென்றும் இதனாலே இங்கே நாமும்

      எப்போதும் ஏற்றமுற மாட்டோம்  ; உண்மை !

கூட்டாக இருந்துவந்த  *எருமை நான்கைக்*

      கொன்றுதின்ன முடியாமல் *சிங்கம்* அன்று

கூட்டாளி நரிசொன்ன தந்தி ரத்தால்

      கூட்டான நான்கெருமை பிரிந்த பின்னே

வேட்டையினைச் சிங்கமதும் எளிதாய்ச் செய்து

      விரைவாக எருமைகளை ஒவ்வொன் றாகக்

காட்டமுடன் கொன்றுதின்ற கதையைத் தானே

     காட்சிகளாய் இந்தியர்க்குள் காணு கின்றோம் !

இக்காட்சிக் குள்ளிருக்கும் சிங்கம் யாரோ ?

      இழிவுநரி யார் ? என்றே ஆய்தல் விட்டே

இக்காட்சிக் குள்மாய்ந்த  எருமை போன்றோர்

     எவரென்றே  ஆராயின் ஐயோ ! ஐயோ

திக்கற்ற இந்தியரே தெரிகின் றாரே !

      சிந்திக்கத் தவறியதால் இந்தி யர்கள்

எக்கட்சிக் குள்ளேனும் இணைந்தே தங்கட்(கு)

      இருந்தபலம் அனைத்தையுமே இழந்தே விட்டார் !

உடைந்த *நிலைக் கண்ணாடி* யாகி இன்றே

     ஒருபயனும் தாராத பொருளாய் ஆனார் !

அடைந்தஇந்த அவலத்தால்  யாரின் மீதும்

      அவசரத்தில் குற்றத்தைச் சுமத்தல் குற்றம் !

நடைமுறையில் ஒருவர்க்கே ஆகும்  தீதும்

     நன்றும்தான் பிறராலே சேர்வ தல்ல ;

திடமாக *அவர்க்(கு)அவரால்* சேரும் என்று

     தெளிந்துரைத்த *பூங்குன்றன்* சொல்ம றந்தோம் !

*ஒருகட்சி ; தாய்க்கட்சி* யாக இன்றும்

       உலவுகிற * . . கா .* இந்தி யர்க்கே

*பெருங்கட்சி* யாய்இருந்த காலத் தில்நாம்

        பெரியதொரு *கூட்டணியில்* இருந்தோம், அன்று

சிறுகட்சி யானாலும் * . .   கா.வை*

      சிறப்பாகக் *கூட்டணியார்* மதித்த தாலே

சிறுபான்மை இந்தியர்க்கும் *முழு மைச்சர்*

       செழிப்பளித்தார் ஏனாம் ? *நம் ஒற்று மைக்காய் !*

*கொசுவுக்கும் மூட்டைப்பூச் சிக்கும்* அஞ்சிக்

       கொளுத்திவிட்டார் வீட்டை,எனும் கதையைப் போலக்

கொசுபோன்ற சிறுபூசல் வந்த தற்காய்

     . . கா . *கோட்டையையே* சரித்தே விட்டார் !

கொசுவினையே கொல்வதற்கு மருந்தும் உண்டே ;

      குணங்கெட்டே அதைமறந்து * . . கா* . வை

நசுக்கிடவே பிறரோடு கூட்டுச் சேர்ந்தார் ;

     நமக்கின்று *முழுஅமைச்சர்* பதவி இல்லை !

*பிடிக்கவிலை . . கா* என்றால் அன்னார்

     பிறிதொன்றாய் *வலுமிக்க கட்சி* தன்னைக்

கடிதாக அமைக்காமல் *குறைந்த பேரால்*

    *கட்சிகளைப் பலவாக* அமைத்தார் ! எந்தப்

பிடிமானம் இன்றிப் *பல் லினத்தார் கட்சிப்*

      பிடியினிலே சிக்கிஅவர் *தனித்தன் மையை*

உடனிழந்தார்; பின்விளைவைச் சிந்திக் காமல்

     *உட்கார்ந்தார் தலையிலின்று கையை வைத்தே !*

போனதெலாம் போகட்டும் ; இனிமே லேனும்

    புத்துயிரைப் பெற்றதுபோல்  இந்தி யர்கள்

ஆனமட்டும் *ஒன்றிணைந்து பெரிய கட்சி*

     அமைக்கட்டும் ! அல்லவெனில் * . .  கா .* வில்

தானிணைந்தால் தான்நமக்கே இந்த நாட்டில்

       சரியானஉரித்தான *இடமே கிட்டும் !*

ஆணையிட்டே இந்தியர்கள் ஒற்று மையை

     அனுசரித்தே வாழ்ந்தால்தான் நமக்கு வாழ்வு !

பல்லினம்சார் கட்சியிலே இந்தி யர்கள்

    *பங்கெடுத்தல்* தப்பல்ல ! ஆனால் எந்தப்

பல்லினத்துக் கட்சியிலும் பெரும்பான் மையாய்ப்

    பங்கெடுத்தே உள்ளோமா ? இதுதான் கேள்வி !

பல்லினத்துக் கட்சிக்குள் *எள்ளைப்* போன்றே

       *பல்குத்தும் குச்சிகளின் பயனாய் உள்ளார் !*

நல்லதுவா ? இதுநமக்கென்(று) ஆங்கே சேர்ந்த

     *நம்மவரே ; இந்தியரே சிந்திப் பீரே !*

                                                                            *பாதாசன்*