*வசதியுடன் வாழவிட்டால்* *போதும்-ஐயா சாமி…!*


இந்நாட்டில் பிறயினத்தார் *பிரதமராய்* ஆக

       எப்போதும் *மலாய்க்காரர் ஆதரவு* வேண்டும்

முன்னாளில் பிரதமராய் இருமுறைகள் இருந்த

       மூத்தவராம் *துன்டாக்டர் மகாதீர்* சொல் கின்றார் !

எந்நோக்கில் இன்றவரும் ஈங்கிதனைப் பகிர்ந்தார் ?

       என்பதிலே *உட்கிடக்கை ஏராளம்* உண்டாம் !

அந்நோக்கில் மலாய்க்காரர் மட்டும்தான் இங்கே

       ஆயுளுக்கும் பிரதமராம் என்பதையே கண்டோம் !

இங்குள்ள *பூமிபுத்ரா* தனிச்சலுகை யையும்

     என்றென்றும் பிரதமர்கள் அவர்களென்ப தையும்

இங்குள்ள பிறயினத்தார் எப்போதும் ஏற்பர் !

       இந்நிலையில் பிரதமராய் வரவேண்டும் என்றே

தங்களுக்குள் பிறயினத்தார்க்(கு) எண்ணமதே இல்லை ;

       சட்டமதற்(கு) இடம்தந்த போதினிலும் அன்னார்

இங்கிதமாய் நினைப்பதுவே இல்லையெனும் போதில்

      எதற்காக மகாதீர்க்கு வேண்டாத பேச்சு ?

பெரும்பான்மை ஆங்கிலத்தார் பிரிட்டனிலே எனினும்

       சிறுபான்மை இந்தியருள் பிரதமராய் ஒருவர்

இருப்பதுபோல் இங்கிருக்க வேண்டுமெனும் எண்ணம்

       இங்கில்லை என்பதுவும் எல்லார்க்கும் தெரியும் !

அருகிருக்கும் சிங்கையிலே பெரும்பாலோர் சீனர்

    ஆதலினால் அந்நாட்டுப் பிரதமரும் அவரே !

தெரியும்,அதும் ஆனாலும் அந்நாட்டின் அதிபர்

     தெரியலையோ மகாதீருக்(கு) அவர்தமிழர் என்றே !

இந்தியர்க்கோ சீனர்க்கோ மேல்பதவி வேண்டாம் !

     எந்நாளும் அவர்களிங்கு *கேட்பதென்ன ?*, தத்தம்

சந்ததியர் குடியுரிமை பெற்றிருந்தும் கூட

       சந்ததமும் நல்வாழ்வைப் பெறாதபடி குமுறும்

அந்தநிலை ; அவலநிலை ஒழிந்திட்டால் போதும்

       அதைத்தானே கேட்கின்றார் அதைக்கூட *இங்கே*

*வந்தேறி* எனக்கூறி மறுப்பதனை நிறுத்தி

       வசதியுடன் வாழவிட்டால் போதும்ஐயா சாமி !

                                                                     *பாதாசன்*