பெரும்புலவர் *செந்தலைக வுதமன்* தாமும்
பீடுபெற்ற *அன்பரசு* தாமும் *பந்திங்*
திருநகரில் *தமிழ்நெறிசார் கழகத் தாரும்*
திறமாக நடத்தியதோர் *தமிழ்வி ழாவில்*
*அருஞ்சோழன் இராசேந்தி ரன்* தம் முன்னாள்
ஆன்றபெரும் சாதனைகள் அவற்றை எல்லாம்
சிறுபேச்சில் காணொளிகள் உரைக ளோடும்
தெளிவாய்க்கேட் டார்தமிழர் பல்லோர் அன்று !
அவர்கள்தம் உரைகளிலே *கடாரம் கொண்ட*
அச்சோழன் *இராசேந்தி ரன்* மாண் பையே
எவர்கேட்டே இருந்தாலும் , தமிழ ருக்கும்
இம்மண்ணாம் மலேசியத்து நாட்டி னுக்கும்
சுவர்காட்டும் வரலாற்றுச் சித்தி ரங்கள்
சொன்னவுண்மை அனுபவத்தின் உணர்வைக் காண்பார் !
அவர்களுளே பிரதமராம் அன்வர் பேரும்
அடங்குமெனில் அதிமகிழ்ச்சி நமக்கே அன்றோ !
ஓரிருநாள் முன்பு அன்வர் தமிழைப் பற்றி
உரைத்த *பக சா கில்லேங்* என்றே சொல்லால்
காரிருளில் நின்றுகொண்டு தமிழின் மீது
கல்லெறிந்தே விட்டார் ; *சோழன்* தன்றன்
பேரையிங்கே பதித்திருக்கும் வரலாற் றைத்தான்
பெரியமனம் வைத்தவரும் அறிந்தி ருந்தால்
கூரியதோர் கத்தியினால் தமிழை இன்று
குத்தியிருப் பாராமோ ? ; ஊஹூம் … மாட்டார் !
ஆரென்ன சொன்னாலும் எதுவா னாலும்
ஆராய்ந்தே முடிவுசெயல் அறிவாம் என்று
காரென்ன பலமனித நெறிக ளுள்ளே
காசறுநற் பேராசான் *வள்ளு வன்* தான்
ஊரறிய – உலகறிய மொழிந்த வற்றுள்
ஓரளவே அன்வாரும் அறிந்தி ருப்பின்
பாரறிய *பகாசா கில் லீங்* கென் றேதான்
பகர்ந்திருக்க மாட்டாரே ; இதுதான் உண்மை !
*பாதாசன்*