*கூட்டுறவுத் தந்தை,நம்துன் சம்பந்தன்* அன்று
கூட்டுறவை – ஒற்றுமையை இனங்களுக்குள் வலுவாய்
நாட்டுதற்கே *ஒற்றுமைசார் அமைச்சரென* ஆனார் !
நமக்கன்று தெரிந்தவரை இனங்களுக்குள் நன்கு
வேட்கையுடன் ஒற்றுமையை உருவாக்கி, நாட்டில்
மேலான அமைதியையும் நிலைநாட்டும் நோக்கைக்
கோட்டைகட்டிக் காப்பதுவே ஒற்றுமைசார் அமைச்சின்
கொள்கையெனத் தெரிந்துள்ளோம் ; அதுதானே உண்மை !
இனங்களிடை ஒற்றுமையை வளர்ப்பதனை விட்டே,
இந்தியரின் *பொருள்,கல்வி சமூகத்தின் வளர்ச்சி*
தனையுயர்த்தும் திட்டத்தைத் தன்னகத்தே கொண்ட
தன்மையுள *மித்ரா* வை ஒற்றுமைசார் அமைச்சுத்
தனக்குக்கீழ் கொண்டிருக்கக் காரணம்தான் என்ன ?
தன்பொறுப்பாம் ஒற்றுமையை வளர்ப்பதற்கு மாறாய்ப்
பணப்பங்கு செயுமமைச்சாய் மாறிடுதல் சரியா ?
பகிர்வதற்கே ஒற்றுமைக்குப் பதில் *பணமாய்* இருக்கும் !
ஒற்றுமையை வளர்ப்பதற்குச் செலவழிக்கும் பணம்தான்
ஒற்றுமையின் அமைச்சிடமே இருந்திடவே வேண்டும் !
உற்றதோர் இனத்தவரின் மேம்பாட்டுக் காக
ஒற்றுமைசார் அமைச்சினது பணம்பயனாய் நின்றால்
மற்ற–இனத் தார்கேள்வி கேட்டிடமாட் டாரா ?
மல்லாந்து படுத்தேநாம் யோசிக்க வேண்டும் !
ஒற்றுமையை அதிகரித்தே அமைதியினை நாட்டில்
உருவாக்கும் முயற்சிக்கும் பங்கம்வர லாமே !?
புனிதயிடம் ஒற்றுமையின் அமைச்சுக்குள் விரைவாய்ப்
புகுந்திடலாம் பணத்தாலே ஊழல்பெருச் சாளி !
தனியிடத்தில் *மித்ராவும்* இருந்ததனைக் *காக்கும்*
தகுதிபெற்றோர் நேர்மைதனை அரசாங்கம் ஆய்ந்தே
இனி *மித்ரா* முறையாக எப்போதும் இயங்கும்
என்றுறுதி செய்தால்தான் *இந்தியர்முன் னேறத்*
தனிவழியே உருவாகும் ; இதைவிடுத்து *மித்ரா*
தான்,ஒற்று மையமைச்சில் இருந்தால்சிக் கல்தான் !
தேசியத்தின் அளவினிலே ஒற்றுமையின் அமைச்சின்
செயல்பாடும் உண்டதிலே மாநிலமாம் பினாங்கு
தேசியத்தின் அளவிலிலை ! அதன் *இந்து அறஞ்சார்*
*வாரிய* மேன் ஒற்றுமையின் அமைச்சின்கீழ் ? சரியா ?
யோசித்தால் ஒற்றுமைகொள் அமைச்சின்கீழ் *இந்து*
உள *அறத்தின் வாரியமும்* எவ்வகையில் சேரும் ?
“நேசிப்போம் ஒற்றுமையை“ என்பதற்கு மாறாய்
*நேசியொரு மதம்* எனலா அவ்வமைச்சின் கொள்கை ?
பெருகிவிட்ட *இனவாத, மதவாத* நோயின்
பிடியிருந்து மக்களையே மீட்டெடுக்கும் பெரிய
தொருவேலை ஒற்றுமைசார் அமைச்சுக்கே உண்டாம் !
உருப்படியாய் அவ்வேலை முடிப்பதற்கே பொறுப்பாய்
இருப்பதற்கே அவ்வமைச்சும் உழைத்திட்டால் *மித்ரா*
எப்படித்தான் அதன்கீழெ செயல்படவும் முடியும் ?
விருப்புற்றுக் கேட்கின்றோம் இந்தியர்கள் சார்பில் ;
*மித்ராவும், வாரியமும்* தனித்தியங்கச் செய்வீர் !
*பாதாசன்*