பாரதி தமிழ் மன்றத்தின்* *பாரதியார் நினைவு ‘141


பாரதியார்
எப்படித்தான் இருந்தி ருப்பார் ?

      பலநாளாய் இளவயதில் யோசித் துள்ளேன் !

பாரதியார் இப்படித்தான் ; என்றே அன்று

      படத்தில்தான் நடிகர் *சுப் பையா* காட்டி

வீரமிக்க பேச்சதுவும் கவியும் சேர்ந்த

       விவேகமிகு பாரதியை உணர வைத்தார் !

ஈரமிக்க நெஞ்சுடையார் *அவரும்* என்றே

      எடுத்துரைக்கப் பாரதிபாட்(டு) அதிகம் உண்டாம் !

*தமிழவேள் சாரங்க பாணி* அந்நாள்

      *தமிழர்திரு நாள்* கண்ட காலத் தில்தான்

தமிழ்க்கவிஞர் *பாரதி,பா ரதிதா சன்* யார் ?

      தமிழ்மொழியின் *சிறப்பென்ன ?* வானு யர்ந்த

*தமிழர்வர லாறென்ன ?* என்ப வற்றைச்

        சரியாக ஓரளவுக்(கு) உய்த்து ணர்ந்தேன் !

*அமிழ்தருந்தி* மகிழ்ந்திருந்த அந்த நாளை

         அடியேனும் இன்றுணர்ந்தேன் ; எதற்காம் ? சொல்வேன் !

இந்நாட்டில் *பாரதியார் தமிழ்மன் றத்தார்*

     ஈங்குள்ள *முத்தமிழ்ச்சான் றோரைக்* கண்டே

எந்நாடும் அவர்தொண்டு , புகழை எல்லாம்

      இருநூலில் பதிவிட்டே வழங்கி யுள்ளார் ;

பன்முறையும் படித்தாலும் சலிக்கா வண்ணம் !

    பலரிதனை அறிந்துள்ளார் ! என்றா லுந்தான்

இந்நாட்டில் *பாரதியை இளையோர் பல்லோர்*

      இதயத்தால் உணர்ந்திடவே செய்தார் இந்நாள் !

*தமிழ்ப்பள்ளி மாணவர்கள், பல்க லைசேர்*

      தமிழினத்தின் *இளம்பட்ட தாரி* சில்லோர்

அமைவாக ஒன்றிணைந்தே அருமை யாக

       அறிந்தேநம் பாரதியைப் போற்றச் செய்தார் ;

நமக்கெல்லாம் நேரடியாய்ப் பார்க்க வொண்ணா,

     நல்லதொரு சமுதாயம்   காண நாளும்

இமைமூடா திருந்துகவி எழுதிப் போந்த

     *இளைஞர்பா ரதியை* நேர் பார்க்க வைத்தார் !

பட்டிதொட்டி களிலெல்லாம் அக்கா லத்தில்

     *பட்டிமன்றம்* நடந்ததெலாம் கனவா ? என்றே

அட்டியின்றி நிதம்வருந்திக் கிடந்த துண்மை !

    அப்படியா ! ஏன்கவலை ; திவலை கண்ணில் ?

*பட்டிமன்றம் இதோ !* என்றே காட்டி நெஞ்சில்

         பல்கலையின் மாணவர்கள் பால்வார்த் திட்டார் !

தட்டிக்கை ஒலியெழுப்பிப் பாராட் டைத்தான்

     *தமிழ்மன்றப் பாரதிக்கு* மகிழ்வாய்ச் சொன்னோம் !

                                                                                      *பாதாசன்*