தமிழரெல்லாம் தைப்பொங்கல் கொண்டாடும் போது
*தமிழ்ப்பள்ளி* அனைத்திலுமே *தைப்பொங்கல்* நாளை
அமைவாகக் கொண்டாட வேண்டுமையா யாண்டும் !
அதில்தானே மாணவர்க்கே வரலாறு தெரியும் !
தமிழ்ப்பள்ளி *தலைமையா சிரியர்மன் றத்தார்*
தானரசுக் கே,இந்தக் கோரிக்கை விடுத்துத்
தமிழ்ப்பள்ளி களில் *பொங்கல் திருநாளை* மகிழ்வாய்த்
தவறாமல் மறவாமல் கொண்டாடச் செய்வீர் !
பொங்கலெனில் வெறும்அரிசிப் பொங்கலென யாரும்
பொருள்கொள்ள வேண்டாமே ; பொங்கலது தமிழர்
தங்களுக்கு மட்டுமன்றி உலகத்தார் யார்க்கும்
தரமிக்க உணவான அரிசிதனை அளிக்கும்
தங்கநிகர் மதிப்புமிகு உழவர்க்கு நன்றி
சாலவுரைப் பதனோடு புவனமெலாம் வாழத்
தங்கஒளி தரும்சூரி யனுக்கும்நம் நன்றி
சாற்றுவதை உணர்த்துவதே *தைப்பொங்கல் நோக்கம் !*
மிகப்பெரிய உலகத்தின் மிகப்பெரிய *கண்டம்*
மேலான *ஆசியாக் கண்டம்* எனச் சொல்வார் !
மிகப்பெரிய மக்கள்தொகை கொண்டகண்டம் அதற்கே
*வேளாண்மை* ஒன்றேதான் முதல்தொழிலாம் அதனால்
மிகமேலாய் மக்களின்றும் அரிசியையே உணவாய்
விரும்பிடுவார் ; அதனால்ந்ம்*உழவர்க்குப் பெருமை !*
உழவர்களின் பெருமைதனை ; அருமைதனை இந்த
உலகத்தார் அறிவதற்காய்த் தொல்தமிழர் நாளும்
உழவுக்கும் உழவர்க்கும் நன்றிதனைக் கூறும்
உயர்பண்பைக் கொண்டிருக்கும் தைப்பொங்கல் நாளைக்
கிழவர்முதல் சிறுவரெலாம் கொண்டாட வேண்டிக்
கிளைகொளையாய்ப் படர்ந்துவரும் தமிழர்சந் ததியர்
விழுமியமாய்ப் பொங்கலினை என்றென்றும் எண்ணி
வீரியமாய்க் கொண்டாட வழிசெய்க மன்றீர் !
மாணவர்க்கும் மாணவியர் அனைவருக்கும் *பொங்கல்*
*வரலாறு* தெரியாமல் இருந்திடக்கூ டாதே !
மாணமிகு தைமுதல்நாள் பொங்கலென அறிந்தால்
வருங்காலப் பெரியவராய் பின்னாளில் அவர்கள்
காணுகையில் கட்டாயம் பொங்கலினைத் தொடர்வர் !
காலமெலாம் இதுதொடரத் தமிழ்ப்பள்ளி பொங்கல்
பேணுதற்கே அவற்றுக்குப் பொங்கல்விடு முறையைப்
பீடுபெறு *மன்றத்தார்* பெற்றளிக்க வேண்டும் !
*பாதாசன்*
*அரும்பொருள் விளக்கம் :-*
மன்றீர் : தமிழாசிரியர் மன்றத்தார்