அரிசிவிலை குடிநீர்விலை* *அதிரடியாய் உயர்ந்தால்.


எந்தவொரு
பொருள்விலையின் *ஏற்றத் திற்கும்*

      எத்தனையோ காரணங்கள் சொல்கின் றார்கள் !

அந்தவொரு *காரணங்கள் தொகுப்பில்* உள்ள

       அத்தனையும் உண்மைகளே எனக்கொண் டாலும்

முந்தி,அந்தக் காரணத்துள் *வருமா னத்தை*

      முன்னிறுத்தும் திட்டமெதும் இல்லை என்றால்

சிந்திப்பீர் பொருள்விலைகள் ஏற்றத் தாலே

        *செலவதிகம் ; குறைவருவாய்*. இதுதான் உண்மை !

ஏறுகிற விலைவாசிக் கேற்ப மக்கள்

     எல்லார்க்கும் வருமானம் பெருகா விட்டால்

மாறுதற்கு வழியுண்டா ? ஏழை மாந்தர்

      வாழ்வுயர வகையுண்டா ? அரசாங் கத்தார்

ஆறுதலைத்,தேறுதலை சொன்னால் மட்டும்

      அடிமட்ட மக்கள்நிலை மாறும் என்று

கூறுவதால் என்னபயன் விளையும் ? சற்றே

       கூர்த்தமதி யால்,அரசு ஆய்தல் வேண்டும்  !

*அரிசி* முதல் குடிக்கின்ற *நீர்* ரைக்கும்

         அதிரடியாய் விலையேறின் *ஏழை வாழ்வு*

*தரிசுநில* மாயன்றோ மாற நேரும் ;

     தரித்திரப்பேய் பிடித்தாட்டும் ; ஐயோ ! அம்மா… !

கரிசனமும் மிகவைத்தே ஆட்சி யாளர்

    கண்டிப்பாய் விலைவாசி உயர்வுக் கேற்ப

வருமானம் உயர்வதற்கும் வழிசெய் திட்டே

      வறியவர்க்குப் *பால்வேண்டாம் ; நீர்வார்ப் பீரே !*

செலவுயர்வைத் தடுப்பதற்கு முடியா தென்றால்

    வரவுயர வழிசெய்வீர் ; இயலா தென்றால்

நிலைகுலைந்தே போய்விடுவர் நாட்டு மக்கள் ;

     நினைக்கையிலே நெஞ்சுபஞ்சு நெருப்பாய்த் தீயும் !

அலைகடலில் தத்தளிக்கும் துரும்பைப் போன்றே

       அல்லாடும் மக்களென்று அமைதி காண்பார் !

உலைவைக்கும் *அரிசிவிலை* உலைநீர்க் கான

       விலையுயர்வால் ஏழையென்ன செய்வார் ? பாவம் !

                                                                               *பாதாசன்*