*மலாயர்களும் இருப்பதனை* *மறப்பார் யாரோ ?*


தேவையற்ற
பிரச்சினையைப் பேசி டாமல்

        தினந்தோறும் இந்தியரை இருக்கக் கோரித்

தேவையெனத் தாம்கருதும் கருத்தை அன்று

        திடமாக உரைத்த *பிர தமரும்* இன்று

தேவையெனத் தாம்நினைக்கும் சிக்கல் பற்றித்

         திறம்படவே விவரிக்கும் மனுஅ ளித்துத்

தீர்வையுடன்  சொல்கவென இசுலாம் மக்கள்

      திரண்டுள்ளார் ; அவர்க்கென்ன பதில்யார் சொல்வார் ?

மனுக்கொடுத்த இசுலாம்சார் சமூகத் தாரும்

        வாய்பொத்திக் கைகட்டி இந்தி யர்போல்

மனுக்கொடுக்கா(து) அடங்கிடத்தான் வேண்டும் என்று

        மாண்புமிகு பிரதமரும் சொல்வா ராமா ;

மனுக்கேற்ற நடவடிக்கை எடுத்தே  இஸ்லாம்

   மக்கள்மனம் மகிழ,எதும் செய்வா ராமா ?

மனுக்கொடுத்தல் முசுலிம்கள் உரிமை என்றால்

      மனுவழங்க இந்தியர்க்கும் உரிமை உண்டே !

இந்தியர்கள் மனுத்தரவும் முனைய வில்லை ;

        இதற்காக ஊர்வலமும் நடத்த வில்லை !

வெந்ததனைத் தின்றுவிட்டு மனத்துக் குள்ளே

      வந்தவற்றை வெளிப்படுத்தக் கூடா தென்று

நொந்துகிடக் கின்றநலி இந்தி யர்தம்

       நோதலினைப் புரிந்துகொண்டே அவர்கள் சார்பாய்

இந்தமனு வைஅரசுக்(கு) முசுலிம் தந்தார் !

      இதற்குநன்றி உடனுரைத்தார் இந்தி யர்கள் !

மதச்சார்பு மனுவுக்குள் ஊறு காயாய்

       மணக்கின்ற தாம்மலேசி யர்தம் வாசம் !

இதமான சுகமளிக்கும் இக்கொள் கைக்குள்

    இருக்கின்ற ஒற்றுமையால் மனித நேயப்

பதத்தால்நம் அரசாங்கம் மக்க ளுக்கே

      பலன்தந்தால் எல்லார்க்கும் நன்மை தானே !

வதைபடுநம் *நாற்பதுபி* மக்கட் குள்ளே

      *மலாயர்களும்* இருப்பதனை மறப்பார் யாரோ !?

கூட்டணிசேர் கட்சிகளின் முடிவின் போரில்

       கூட்டாக *ஒற்றுமை* சார் கட்சி இன்று

ஆட்சியின்று நடக்கவில்லை ; அதற்கு மாறாய்

        அனைத்(து) *எம்.பி.* உறுப்பினரை அழைத்துப் பேசி

மாட்சிமைசார் மாமன்னர் செய்த பேற்றால்

       மலேசியத்தில் இற்றையநாள் அமைந்தி ருக்கும்

ஆட்சியிதில் எல்லார்க்கும் நன்மை கிட்ட

        ஆனவழி செய்வதுதான் அரசு நீதி !

                                                                                *பாதாசன்*