*அரிசி விலை உயர்வா ! – சொல்ல* *வாயில்லை ; வார்த்தை இல்லை !*

தென்னை மரத்தினிலேஒரு

      தேள்கொட்டி விட்டதென்றால்

*பன்னை* மரத்திலங்கேநெறி

     பாங்குறக் கட்டுமென்பார் !

அன்ன விதம்நாட்டில்உடன்

      அரிசி விலையுயர்வால்

எண்ணில் பொருள்விலைகள்உடன்

        எகிறிடும் நிச்சயமாய் !

*எழுபதாம்* ஆண்டுகளில்அப்போ(து)

      ஏறிற்(று) அரிசிவிலை !

பழுதல அஃதெனவேநினைத்தோர்

     பல்பொருள் உயர்விலையைத்

தழுவி யதைக்கண்டேகொண்ட

     தாக்கத்தை என்னென்பேன் !

அழுதனர் அன்றுமக்கள் ! – விடை

     அதற்கின்றும் கிடைக்கவில்லை !

இந்த நிலையினிலேமீண்டும்

     ஏறிற் றரிசிவிலை !

அந்தயின் னல்பலவும்இன்றே

     அரவாய்ப் படமெடுக்க

எந்த விதம்அதனைமக்கள்

    ஏற்பார் ;  சரிசெய்வார் ?

நொந்தவர் நூலாகிமன

      நோயினுக் காளாவார் !

அரிசி விலையுயர்வைமக்காள்

    அலட்சிய மாக்காதீர் !

பெரிய விலைகளுமேசிறு/பெரு

    பிறபொருளுக் காகிவிடும் !

உரிய வருமானம்இல்லா

    *உடலுழைப்பார்* காணும்

வறிய நிலையதனைச்சொல்ல

      வாயில்லை ; வார்த்தையிலை !

                                           *பாதாசன்*

*அரும்பொருள் விளக்கம் :-*

1. பன்னை : பனை

2. அரவு : பாம்பு