மாட்சிமை தங்கிய மாமன்னர்
மக்கள் என்றும் மறவாத
ஆட்சி நடத்தி விலகுகையில்
அவர்க்கே அளித்த விருந்தினிலே
நீட்சி மிக்க கண்கலக்கம்
நெஞ்சம் உருகக் கொண்டதனை
காட்சி யாகக் கண்டனமே !
கண்ணீர் வழிய நின்றனமே !
கடந்த ஐந்தாண் டுக்குள்ளே
கவலை அளித்த பலநிகழ்வில்
நடந்து முடிந்த தேர்தல்பின்
நாட்டில் ஆட்சி அமைவதிலே
நடந்த சிக்கலை நாமறிவோம் !
ஞாயம் மிகுந்த நல்லாட்சி
நடக்க நம்முடை மாமன்னர்
நவின்ற திட்டம் வெகுசிறப்பாம் !
மன்னர் அந்நாள் அலட்சியமாய்
மனத்துக் குள்ளே இருந்திருப்பின்
என்ன நாட்டில் நடந்திருக்கும்
என்பதை நினைத்தால் குலைநடுங்கும் !
இன்று வரைக்கும் நிலையாக
எக்கூட் டணியும் ஆள்வதற்கே
அன்று வழியே அமைந்திருக்க
ஆகா தென்பதும் உண்மையன்றோ ?
நாட்டு மக்கள் அமைதியுடன்
நன்றே வாழ மாமன்னர்
கேட்டுக் கொண்ட தன்பேரில்
கெட்டி யான ஒற்றுமையின்
ஆட்சி அமைந்த காரணத்தால்
அதற்கு வழியைக் கண்டுரைத்த
மாட்சிமை தங்கிய மாமன்னர்
வாழ்க ! வாழ்க ! பல்லாண்டு !
*பாதாசன்*