*செல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருப்பான்* *நல்விருந்து வானத் தவர்க்கு* – குறள் : 86

*செல்விருந்து மாமன்னரும்*

*வருவிருந்து மாமன்னரும்*

வந்தவிருந் தினரான *முன்னாள்மா மன்னர்*

     மக்கள்மனம் நிறைந்தபடி *நல்லாட்சி* தந்தே

*அந்தவொரு இக்கட்டும்* சூழ்ந்திருந்த நாட்டை

       ஆபத்தி லிருந்தன்று *காப்பாற்றி னாரே !*

எந்தவொரு நன்றிசொல்லிப் பாராட்டி னாலும்

       இன்று *செல்லும்* விருந்தினராம் மாமன்னர் அன்று

சிந்தித்துச் *செய்தசெயல்* அதற்கேதும் ஈடாய்த்

    தேர்ந்துசொல ஏதுமிலை ;  *செல்விருந்தே* வாழ்க !

செல்விருந்தாம் முன்னாள்மா மன்னருமே இன்று

     சீர்,சிறப்பாய் தம் *பாகாங்* மாநிலமே சென்றார் !

நல்விருந்தாய் *வருவிருந்தாய்* மாநிலமாம் *ஜோகூர்*

   *சுல்தானும்* இன்றுதலை நகரத்தை அடைந்தே

இல்லமதாம் மாமன்னர்க் குரித்தான அதனில்

      இன்பமிகு சூழ்நிலையில் குடிபுகுந்தார் ; அவரைச்

சொல்லாலும் நினைவாலும் வரவேற்றோம் ; ஜோகூர்

         சுல்தானே,மாமன்னா வருகவென வாழ்த்தி !

*பதினேழாம் மாமன்னர்* பொறுப்பினையே ஏற்றுப்

        பல்லினத்தார்,பன்மதத்தார் வாழுகின்ற நாட்டில்

அதிபுகழைப் பெறும்வண்ணம் ஆட்சியினை நடத்தும்

       அலாவுதினின் விளக்கினைப் பெற்றமா மன்னர்

மதிக்கூர்மை பெற்றவராம் மக்களெலாம் அறிவோம் !

       மாமன்னர் நாட்டிலின்று நடமாடும் *ஊழல்*

*சதித்திட்டம் , இனவாதம், மதவாதம்* யாவும்

       சரிந்துவிழும் கட்டடமாய்ச் செய்திடுவார் உண்மை !

பல்லினத்துப் பறவைகள்வாழ் *ஆலமர நாடு ;*

      பன்னிறத்து மலர்போல்பல் லினத்தவர் *பூஞ் சோலை !*

நல்விதத்தில் பன்மதம்சேர் *ஒற்றுமைத்தேன் கூடு !*

     ஞாயமெது நீதியெது இரண்டினையும் நன்கு

பல்விததும் ஆராய்ந்து முடிவுசெய் *மா மன்னர்*

     பதவியிலே அமர்ந்துள்ள ஜோகூரின் சுல்தான்

சொல்,செயல்,எண் ணம்மூன்றில் துலாக்கோல்போல் நேர்மை

சூழ்ந்தமா மன்னவரே *வருவிருந்தே* வருக !

                                                       *பாதாசன்*