இந்தியர்கள் *பாஸ்* மீது வைக்கின்ற பாசம்
எதிர்நாளில் ஐயையோ இந்தியர்க்கே மோசம் !
சிந்தித்தால் அப்பாசம் அதிகரிக்கும் வாய்ப்புச்
செழித்துவிடும் போல்தமக்குத் தோன்றிடுதே என்று
இந்தியரின் தலைவர்களுள் ஒருவரவர் *பினாங்கு*
*இராமசாமி* கூறியுள்ள கருத்தினையும் சற்றே
இந்தநிமி டம்முதலாய் *இந்தியனே யோசி !*
எறும்பூரப் பெருங்கல்லும் தேய்ந்துவிடும் என்றே
ஏற்கெனவே நம்முன்னோர் சொல்லியுள்ள தைப்போல்
இரும்பதுவும் கடுஞ்சூட்டில் இளகுமென்ப தைப்போல்
இந்தியர்கள் ஆதரவு பாஸ்கட்சி பக்கம்
இருந்துவிடில் ஐய்யய்யோ இந்தியர்க்கே வெட்கம் !
இதையுணராச் சவமாக இருப்பதுதான் துக்கம் !
குறும்பிதுவே என்றெவரும் கருதிமடத் தனமாய்க்
கொள்ளிதனைத் தம்தலையில் வைத்திடவே லாமா ?
பன்மதத்தார் பல்லினத்தார் வாழ்மலைய நாட்டைப்
*பாஸ்* கட்சி முழுமையுமாய் மதச்சார்பாய் ஆக்கும்
வன்மனத்துச் செயல்பாடும் குறிக்கோளும் நாட்டு
மக்களுக்குத் தெரியாமல் இருக்கவில்லை ; இருந்தும்
இன்னும் *பாஸ் ஆதரவு மன்றத்தை* அமைத்தே
இந்தியருள் மிகச்சிலரும் இயங்குகிறார் ;அன்னார்
தன்னுணர்வால் இதைச்செய்கின் றாரா ; யாம் அறியோம் !
தமிழர்களே,ஒட்டுமொத்த இந்தியரே ஆய்வீர் !
மோடிமஸ்தான் போக்கினிலே *மகாதீரும்* நன்றாய்
முழுவெறுப்பை சீனருடன் இந்தியர்கள் மீதும்
*பாடிவைத்து* மலாயர்களைத் தூண்டிவிட்டே உள்ள
பாதகத்தைத் தெரிந்தபினும் பாஸ்வழியைத் தேடி
நாடுவதில் எப்படித்தான் இந்தியர்க்கே நெஞ்சில்
நஞ்சுபுகுந் திட்டதுவோ ? அதையழிப்பாய் இறைவா !
கூடியெதைச் செய்வதிலும் ஒன்றிணைய மறுக்கும்
*கூட்டம்நாம்* *பாஸ்கூட்டில்* மட்டும்சேர் வதும்ஏன்?
*பாதாசன்*