*பக்காத்தான் ; ஜ.செ.க.* இரண்டும் நன்றி
பாராட்டும் கட்சிகளா ? அதில்தான் ஐயம் !
மக்கள்இந் தியர்கருத்தும் இதுதா னென்று
வாய்திறந்தே அவர்சொல்ல வில்லை ; ஆனால்,
பக்காத்தான் கட்சியினைச் சேர்ந்த வர்தான்
பக்காத்தான் நன்றிமறந் திட்ட தென்றார் !
பக்காத்தான் வழிசென்று *ஜ .செ. க* வும்
பாதகத்தை இந்தியர்க்குச் செய்கின் றாரே !
பேருக்குப் பல்லினத்துக் கட்சி என்றே
பேர்போட்டுக் கொண்டிருக்கும் போதும் ; பார்க்க
ஊருக்கு நண்பர்கள்போல் நடித்துக் கொண்டே
உளத்தளவில் ஒட்டுறவே இல்லாப் போல
நேருக்கு நேர்நட்பாய் , நேர்நில் லாத
நேரத்தில் பகையாய்அப் *பக்காத் தானும் ,*
யாருக்கும் தெரியாதென் றெண்ணிக் கொள்ளும்
*ஜ.செ.க.* வும்முற்றாய்த் தெளிய வேண்டும் !
இந்தியர் ஆதரவாம் ஏணி யின்மேல்
ஏறிவிட்டுப் பின்னதனைத் தள்ளல் போல
இந்தியரைத் தள்ளிவிடும் போக்கைத் தானே
இன்றளவில் இருகட்சி கொண்டி ருக்கும்
தந்திரமாம் என்றுரைப்பின் பொருந்தம் ; இந்தத்
தந்திரத்தை இந்தியர்கள் உணரா தின்னும்
எந்திரம்போல் இருகட்சி வளர்ச்சிக் காக
எள்ளென்றால் எண்ணெயென உழைக்கின் றார்கள் !
பக்காத்தான் சார்பிலன்று *சுரேந்தி ரன்* தான்
பலநூறு பேர்குடியு ரிமையே இன்றித்
திக்கற்றுக் கிடக்கின்றார் என்றே கூறித்
தெறிக்கவிட்டார் ; *தே . மு* வை அன்று பார்த்தோம் !
பக்காத்தான் இன்றாட்சி செய்யும் வேளை
பரிதவிக்கும் குடியுரிமை இல்லா தோரின்
சிக்கலெதும் தீரவிலை ; ஆனால் பாவம்…
சேவகராம் *சுரேந்திரன்* தான் நொந்தே உள்ளார் !
பக்காத்தான் – ஜ . செ . க .இரண்டி னாலும்
பாதித்த இந்தியர்கள் பலர்அ வற்றால்
*சக்கை* யெனப் படுமிந்தி யர்கள் இன்றும்
சற்றேனும் விழிப்புணர்வு பெறவே இல்லை !
தக்கை,அவர் அதனால்தான் அவருள் யார்க்கும்
தகவுள்ள *முழுஅமைச்சர்* பதவி இல்லை !
பொக்கைமதி விட்டுக்கூர் மதியைக் கொண்டு
புரிந்திடுவீர் அரசியலை இந்தி யர்காள் !
*பாதாசன்*