சீனமொழி கற்றாலே *கோடி நூற்று*
*நாற்பது* பேர் சீனருடன் தொடர்பு கொள்ள
ஆனவழி பிறக்குமென்ப தாலே மக்காள்
அருந்தமிழீர் , ஆர்வத்தைக் கொள்வீர் என்றும்
சீனமொழி கற்கவென்றே ஒருவர் இன்று
செப்பியுள்ள கருத்தினிலே தவறே இல்லை !
ஆனதினால் சீனமொழி கற்ப தாலே
அதில்சிலவாய் நன்மையென்றும் கூறல் நன்றே !
ஆனாலும் ஆவலுடன் உலகி லுள்ள
ஆறாயி ரம்மொழியைக் கற்றிட் டாலும்
போனால்போ கட்டுமென ஒதுக்கி டாமல்
புவனத்தின் முதல்மொழியாம் தமிழைக் கற்கத்
தானாக விரும்பிடவே தவறி டாதீர்
தமிழர்களே ! ஒருவேளை தவறி விட்டால்
கோனாக நிமிர்ந்திருந்த உங்கள் தோற்றம்
கூனாக மாறிவிடும் கண்டிப் பாக !
தாய்மொழியில் கல்வியினைத் தொடங்கி னால்தான்
தன்னூக்கம் ; சிந்தனைகள் கூர்மை யாகும் ;
ஆய்ந்துலக அறிஞர்பலர் இந்தக் கூற்றை
ஆணியடித் தாற்போல அடித்துச் சொல்வார் !
காய்ந்தமனத் தோடறிஞர் கருத்தை ஏற்கக்
கடுகளவும் தவறிடுவோர் அறிவ ழிந்து
தேய்ந்தநிதி யாகிடுவர் ! அதனால் தானே
தாய்மொழியாம் தமிழ்கற்பீர் எனச்சொல் கின்றார் !
எந்தமொழி கற்றாலும் அதனைக் கற்ற
*எவருமந்த மொழிக்குரிய இனத்தார்* ஆகார் !
சந்ததமும் சந்ததியீர் தமிழி னத்தீர்
தமிழ்கற்றே தமிழனெனும் அடையா ளத்தை
தந்தமொழி ; தருகின்ற மொழியாய் உள்ள
தமிழ்மொழியைப் போற்றிடுவீர் ; ஆனால் ஒன்று ,
சொந்தமொழி *தமிழ்மறந்தும் ; துறந்தும்* நீங்கள்
எந்தமொழி கற்றிருந்தும் செல்லாக் காசே !
*பாதாசன்*