மந்திக்கு விருந்திட்டால்* *அதைத் தள்ளும் மந்தி

 


இந்தியர்கள்
நேற்றுவரை அரசியலில் *ஆணி !*

       இத்தேர்த லில்மாற்றார் வெற்றிக்கே *தோணி !*

எந்தவிதம் இதுநமக்கே எதிர்நாளில் *இலாபம் ?*     என்பதுதான் கேள்விஇன்றே யார்சொல்வார் பதிலை ?

சந்ததியர் வாழ்நாளும் என்னகதி ஆகும் ;

      தலைவர்களும் இதைவிரிவாய் ஆராய்ந்தா ராமோ ?

அந்தநாள் இந்தியர்தம் ஆதரவில் ஆண்ட

       அரசியலில் *முதன்மையினர்* இதைமறந்தார் ஏனோ ?

இந்தியர்தம் மக்கள்தொகைக் கேற்ப *ஒரு கட்சி*

      இல்லையெனில் மறுகட்சி *இருகட்சி* போதும் !

இந்தமன நிறைவின்றி *பலகட்சி* தம்முள்

        இணைந்ததனால் இந்தியருள் அன்றிருந்த *ஒருமை*

சந்திசிரிக் கும்வகையில் குலைந்திருக்கும் போது                        

       தமிழர்களோ, இந்தியரோ தனிவலிமை இல்லாக்

குந்தகத்தால் தான்பிறரும் இந்தியர்தம் *வாக்கை*

      கொஞ்சமுமே மதிக்காமல் கூறுகிறார் நிந்தை !

*ஆணியாக*  இருந்தநமைப் பிடுங்கிவிட எண்ணி

         அயலருடன் கைகோத்தே இந்தியர்கள் இன்று

*தோணி*_யென அயலவர்க்கே  ஆகிவிட்டால் இங்கே

            *தொட்டதெலாம் நமக்கென்றும் பொன்னாகும்* என்னும்

பாணியிலே அரசியலை நடத்தும்நம் போக்கும்

        பலன் தருமா ; நலம் தருமா ? *யோசிப்பீர் நன்றே !*

ஆணிதனை அரசியலாம் சுவரினிலே  அடித்தே

       *அரும்பதவி யுடன்படமும் மாட்டிவைப்பின் மேன்மை !*

*அரசியலார் பைதூக்கும்* வேலையது வாயின்

       அவ்வேலை இந்தியர்கள் செய்வதனைத் தவிர்த்தே

இரந்துண்டு வாழ்வதுவே இந்தியர்தம் *வாக்குக்(கு)*

       இருக்கின்ற *மதிப்பென்றால்* வாக்குகளைப் போடும்

கரந்தன்னை வெட்டிவிடத் தோன்றுதையா ! இன்று

      காசுக்கும் வேறெதற்கும்  தன்வாக்கை விற்கும்

மரமண்டைக் குள்ளிருக்கும் மூளைதனைத் தோண்டி

      *மந்திக்கு விருந்திட்டால் அதைத்தள்ளும் மந்தி !*

                                                                                *பாதாசன்*