அனைத்துலகப் போட்டிகளில் *பூமி புத்ரா*
அல்லாதார் ; மேலதிகத் திறன்பெற் றோரைப்
பனையளவு இடம்பெறச்செய் யாவிட் டாலும்
பகுத்தறிவால் பலவகையும் சிந்தித் தேதான்
தினையளவுக் கும்மேலாய்ச் சேர்ப்ப தற்குத்
திட்டமிட வேண்டுமென அரசாங் கத்தைத்
துணையமைச்சர் *ரமணன்* அவர் கோரியுள்ளார் !
தொடர்ந்துநிறை வேறட்டும் அவர்கோ ரிக்கை !
இக்கோரிக் கையுடனே இந்தி யர்கள்
எதிர்நோக்கும் *வேலை,கல்வி, பொருள்* வ ளர்ச்சி
சிக்கல்களும் தீர்ந்திடவே அரசு திட்டம்
தெளிவாக வரைந்ததனைச் செயல்ப டுத்தத்
தக்கவழி அரசாங்கம் காண்க, என்றே
தகுந்ததொரு *பூமிபுத்ரா பொருளா தார*
அக்கூட்டத் தில் *ரமணன்* தம்க ருத்தை
அழுத்தமுடன் விளக்கியுள்ளார் ! அவர்க்கு நன்றி !
பொதுவாக இந்தியரின் வளர்ச்சிக்(கு) இன்று
*புதிதான சவாலாக* அயல கத்தார் ;
மெதுமெதுவாய் அதிகரிக்கும் *வங்கா ளத்தார் ;*
வேலைக்காய்ப் பெருகும்,*இந்தோ னேசி யர்கள்*
புதுவருகை அமைந்துள்ள தாக *டத்தோ*
*ரமணனுமே* கூறியுள்ள – ஏற்கத் தக்க
பொதுக்கருத்தை *இந்தியரும் அரசும்* நன்றாய்ப்
புரிவதுடன் ஆராய்தல் வேண்டும் ; வேண்டும் !
உலகளவில் போட்டிகளில் மட்டு மின்றி
உள்நாட்டில் *பொருள்,கல்வி, தொழில்கள்* போன்ற
பலதுறையில் இந்தியர்க்கும் பங்க ளிக்கும்
படி,அரசு திட்டங்கள் வகுத்தால் நாட்டில்
இலை,எந்த வாய்ப்பும்இந்தி யர்க்கே என்றே
யாரேனும் சொல்லுதற்கே இடமா உண்டு ?
இலைபோட்டுப் பரிமாறும் பந்தி தன்னில்
இந்தியரை ஒதுக்குவதா மனிதப் பண்பு ?
மலாயர்தம் சலுகைகளைப் பற்றிக் கேள்வி
மனத்தாலும் பிறஇனத்தார் எழுப்ப வில்லை !
எலார்க்குமிது தெரிந்ததுதான் ! ஆனால் இங்கே
இருக்கின்ற அயல்நாட்டு மக்க ளுள்ளே
பலாப்பழம்போல் எளிதாகக் கிடைக்கக் காணாப்
பலவாய்ப்புக் கிடைக்கையிலே இந்த நாட்டில்
நிலாத்தேய்வு போல்தேய்ந்தே வாழ்வோர் மீண்டும்
நிலாவளர்ச்சி காண்பதிலே சிக்கல் ஏனோ ?
*பாதாசன்*