*சுவர்ப்பந்துப்* போட்டியெனும் *ஸ்குவாஷ்* தன்னில்
சுடர்விட்டே உலகளவில் ஒளிரு கின்ற
*சிவசங்க ரிக்(கு)* என்றன் கோடி வாழ்த்து !
சிங்கப்பெண் வரிசையிலே *தமிழப் பெண்ணாள்*
*சிவசங்க ரியாள்* இன்று உலகம் போற்றும்
சிறப்பினையும் தமிழர்க்கும் மலேசி யர்க்கும்
அவர்தந்தார் ; அவர்தந்தை தாய்க்கும் நன்றி ;
அதனுடனே பாராட்டும் வாழ்த்தும் சொன்னோம் !
இந்நாட்டில் சுவர்ப்பந்துப் போட்டி யில்தான்
ஈடில்லா வெற்றிகளைக் குவித்தி ருந்த
என்னாட்டு *சுவர்ப்பந்துச் சாத னைப்பெண்*
*டத்தோநிக் கோல்டேவிட்* வழியில் இன்று
பன்னாடும் பாராட்டும் வகையில் வெற்றி
படைத்த *சிவ சங்கரியும்* மேலும் மேலும்
மின்னூக்கி யைப்போன்று பலபெண் கட்கே
வேண்டுகிற ஊக்கத்தை வழங்கி டட்டும் !
மலையகத்துத் தமிழ்ப்பெண்கள் *அறிவி யில்* சார்
வளர்ச்சிக்கே *கோமதி* ஓர் சாட்சி போல
*விளையாட்டுத்* துறைக்கின்று சாட்சி யாக
விளங்கு *சிவ சங்கரியே* வளர்க ; வாழ்க !
கலை,அறுபத் தினான்கினிலும் ஆற்றல் பெற்ற
கண்மணியாய் *இந்தியத்துப் பெண்கள்* இங்கும்
வலம்வரவே *கலைமகளே* அவர்கட் கெல்லாம்
*வரம் அருள்க ;* மலேசியத்தின் புகழும் ஓங்க !
நம்,*பத்தாம் பிரதமராம் அன்வர்* இன்று
நாலுபேர் பாராட்டும் வகையில் இங்கே
*நம்,இந்தி யர்க்கொன்றும்* அதிக மாக
நல்லவற்றைச் செய்யவில்லை ; எனினும் *அன்வர்*
நம்சிவசங் கரிபெற்ற வெற்றிக் காக
நயந்துமிகப் பாராட்டை ; வாழ்த்தைச் சொல்லி
நம்மையெலாம் மனங்குளிரச் செய்த தற்கே
நம்,இந்தி யர்சார்பில் மிக்க நன்றி !
*பாதாசன்*
*அரும்பொருள் விளக்கம் :-*
மின்னூக்கி : சார்ஜர்