தமிழ்பேசும் இந்தியருள் ஒருவ ரும்தான்
தக்கமுழு அமைச்சரென ஆவார் என்னும்
தமிழர்களுக்(கு) இனிப்பான சேதி சொல்லும்
தருணமதும் வெகுவிரைவில் வருமே என்று
தமிழ்நாளி தழ்தனிலே வந்த சேதி
தவறான ஒன்றாக இருக்க வேண்டாம் ;
தமிழர்களைப் பெரும்பான்மை யாகக் கொண்ட
இந்தியர்க்கோர் சன்மானம் அதுவா கட்டும் !
முன்னாள் *மா மன்னர்* அவர் முயற்சி யாலே
முடிவாய் *ஒற் றுமைஅரசு* பிறந்த நாளாம்
அந்நாள்தொட்(டு) இன்றுவரை தமிழில் பேசும்
ஆற்றலுள்ளார் அமைச்சரென ஆக வில்லை !
அன்றாடம் இக்குறையை இந்தி யர்கள்
அழுத்தமுடன் வெறும்பேச்சாய்ப் பேசி டாமல்
மன்றாடி அரசிடமே சொல்லி வந்தும்
மனமிரங்கிப் பிரதமரும் ஏதும் செய்யார் !
வரவிருக்கும் *அமைச்சரவை மாற்றத் தில்தான்*
வாய்ப்பாகத் *தமிழ்பேசும் ஒருவ ருக்குத்*
தரக்கூடும் ஓரமைச்சர் பதவி என்னும்
தமிழ்நாளி தழ்ச்சேதி *மெய்யா கட்டும் !*
வரம்சாமி கொடுத்தாலும் இடைம றிக்கும்
வக்ரபுத்தி பூசாரி போல யாரும்
தரவேண்டாம் எனத்தடுக்க வேண்டாம் ; யாரும்
தடுத்தாலும் அரசுசெவி மடுக்க வேண்டாம் !
அமைச்சரெனத் தமிழ்பேசும் ஒருவர் ஆன
அதன்பிறகு நமக்கான தேவை தம்மை
அமைச்சரவை ஏற்கும்வகை நயமாய்ப் பேசி
அவைநடப்பில் வரும்படியே செய்யும் ஆற்றல்
அமைந்தவராய் அவரிருக்க வேண்டும் யாண்டும் !
அதுவன்றி அமைச்சரவைக் கூட்டத் தில்தான்
சமைந்ததொரு பெண்போன்று வெட்கப் பட்டுத்
*தனித்தும்பே சாமலுமே* இருக்க வேண்டாம் !
*பாதாசன்*