பொதுமைசார் இயக்கங்கட் குள்ளே கூட
பொதுத்தேர்தல் போல்,தேர்தல் நடக்கும் வேளை
பொதுமக்கள் அரசியல்சார் கட்சிக் குள்ளே
போட்டியிருந் தால்அதுவே மக்க ளாட்சி !
அதற்கெனஓர் தனிமதிப்பு, மரியா தையும்
அமைந்துவிடும் அதுதானே இயல்பும் ஆகும் !
இதைஉணர்ந்தால் *ம . இ . கா .* கட்சிக் குள்ளே
இப்போது வந்துள்ள போட்டி நன்றே !
கட்சியதாம் ம . இ . கா . தேர்தல் என்றால்
கடந்தநாள் நடந்தவற்றை எண்ணி டுங்கால்
உட்கட்சிப் பூசல்களால் ஏகப் பட்ட
உட்பிரிவு தலையெடுத்தே மேலும் மேலும்
கட்சிக்குள் பிளவுகளும் மனக்க சப்பும்
களையெடுக்க முடியாத அளவில் கண்டோம் !
பெட்பு(எதுவும்) அவற்றாலே இந்தி யர்க்கே
பெரிதாக ஏற்படவே கண்டோ மா,நாம் ?
போட்டியின்றிக் கட்சிநல்ல வளர்ச்சி காணப்
பொடுகளவும் வாய்ப்பில்லை ; ஆனால் அந்தப்
போட்டிகளால் பிளவுற்ற தாலே ஐயோ…
புதுப்புதிதாய்க் கட்சிகளே முளைக்கப் பார்த்தோம் !
ஏட்டிக்குப் போட்டிசெய்தே சிதறு தேங்காய்
என்றாகி விட்டமோ நாமும் ! நம்மை
ஆட்டிவைக்கும் பிளவுப்பேய் அதுவால் நம்மின்
*அடையாளம் அழியும்நிலை வந்தா யிற்றே !*
இந்நிலையில் போட்டிகளே வேண்டாம் என்றே
எண்ணுவதும் சரியல்ல ; *போட்டிக் குப்பின்*
எந்நிலையில் துயர்வரினும் உடன வற்றை
இதயத்தில் இருந்தெடுத்தே எறிந்து விட்ட
அந்நிலைக்குப் பின் *ஒருதாய் மக்கள்* போல
அனைவருமே ஒன்றுபட்டால் *ம . இ . கா .* வை
நந்நிலையில் வைத்திடலாம் வலிமை யோடு !
நாம்ஒன்று பட்டுவிடில் *மாற்றார்* தோற்றார் !
*(வேறு)*
தன்னலத்தைக் கருதாமல் கட்சிநலம் காக்கத்
தலைவரது போட்டியிலே மிகக்குறைந்த வாக்கில்
அந்நாளில் தோற்றபினும் வேறுகட்சி ஏதும்
அமைத்திடவே முயலாமல் தன்வாழ்நாள் வரைக்கும்
தன்னையொரு *ம . இ . கா . உறுப்பினராய்க்* கருதித்
தான்வாழ்ந்த *டான்சிறீசுப் ராவைப்* போன்றே
இந்நாளின் *ம . இ . கா . உறுப்பினர்கள்* எண்ணி
இந்தியரின் ஒற்றுமையை உயர்த்திடவே செய்வீர் !
*பாதாசன்*
*அரும்பொருள் விளக்கம் :-*
பெட்பு – பெருமை
மாற்றார் – பகைவர்