ஐம்பத்து மூன்றாம் ஆண்டதனின்
*தேசிய ஆசி யர்நாளில்*
நம்தமிழ்ப் பள்ளி ஆசிரியர்
*சரண்,கஸ் தூரி, ஆனந்தன்*
தம்சி றந்த சாதனைக்காய்த்
தக்க *பரிசுகள்* பெற்றதனை
இம்ம லேசியத் தமிழரெலாம்
இனிப்பு வழங்கிப் போற்றினமே !
ஆசி ரியர்நாள் கொண்டாட்டம்
அழகாய்ச் சிறப்பாய் நடக்கையிலே
தேசிய அளவில் பாராட்டைச் –
சிறந்த பரிசைப் பெற்றதமிழ்
ஆசி ரியர்கள் *மூவரையும்*
ஆரத் தழுவி அன்னையைப்போல்
ஆசி வழங்கித் தமிழரெலாம்
அன்புத் தமிழால் வாழ்த்தினமே !
அடுத்த டுத்த ஆண்டுகளில்
அத்தகு பரிசை யார்க்கேதான்
கொடுப்ப தென்று திணறும்படி
குவிந்தே தமிழ ஆசிரியர்
கொடுக்க வேண்டும் போட்டியினை ;
கொடுத்தால் *தமிழ்,தமிழ்ப் பள்ளிக்கும்*
தடுக்கப் போமோ வரும்புகழை ?
தமிழா சிரியீர் சிந்திப்பீர் !
தமிழும் தமிழப் பள்ளிகளும்
தமிழர் *அடையா ளம்* இதனைத்
தமிழர் உணர்ந்து *தமிழ்ப்பள்ளி,*
*தமிழைப்* போற்ற வேண்டுமெனில்
தமிழப் பள்ளி *மாணவரும்,*
*தமிழா சிரியர்* அனைவருமே
தமிழில், தமிழப் பள்ளிகளில்
*சாதனை கோடி* செய்திடுவீர் !
*பாதாசன்*