*கழறுதமிழ் ஊர்,என் ஊர் !* *தமிழ்கற்றோர் கேளிர் !*

முகமறியா இளவயதில் தந்தையைநான் இழந்தேன் !

     மூவேழு நால்வயதில் அன்னைதனை இழந்தேன் !

நகர்ந்துவந்த ஐம்பத்தெட் டாம்வயதில் இல்லாள் ;

     நல்லாளை இழந்துவிட்டு நான்தனியன் ஆனேன் !

இகவாழ்வும் மனையாளின் மறைவுக்குப் பின்னே

        எனக்கில்லை என்றாக்கி இறைவைத்த போதும்

அகவாழ்வை எனக்களித்தே ஆறுதலைச் சொன்ன

      அதனருளை என்னவென்றே அடியேனும் சொல்ல ?

பெற்றபிள்ளை இருந்தாலும் உற்றத்தார் என்போர்

   பெயரளவில் சிலரிருந்தும் , சுற்றத்தார் தாமும்

சுற்றியிருந் தாலும்,அத் தாய்,மனைவிக் கீடாய்ச்

      சொல்லுதற்கே இயலாதாம் என்கின்ற நிலையில்

ஒற்றைமர மாய்த்தனித்தே வாழுகின்ற சூழல்

      உலகத்தில் ஒருவருக்கும் வந்திடக்கூ டாதே !

கட்டையிலே போகும்வரை தனிமையிலே வாழும்

    கொடுமையது கடுமையென்றே அனுபவம்சொல் பாடம் !

தனிமையிலே வாழ்ந்திடுமோர் நிலைநமக்கே வரினும்

      தலைவிதிதான் அதுவென்றே தவித்திடவே வேண்டாம் !

தனிமையதும் இனிமைதரும் என்பதற்குச் சான்றாய்த்

      தமிழ்நம்மோ டிருக்கையிலே பிறகுண்டா தனிமை ?

இனியெனக்குச் சாவுவந்த பின்னாலும் தமிழே

     என்னோடு காலமெலாம் தொடருமெனும் போது

தனிமையினிலே நானில்லை ; தமிழோடு வாழத்

       தவமென்ன செய்தேனோ ? இறையுனக்கே தெரியும் !

இனிமேல்நான் விடுகின்ற மூச்செல்லாம் தமிழே !

      எண்ணுவதும் எதையும்நான் பண்ணுவதும் தமிழே !

தனியேன்நான் அல்லன்; என் உயிர்நண்பன் தமிழே !

       தமிழ்மீது பற்றுள்ளோர் ; பாசமுள்ளோர் மட்டும்

இனியெனக்கே உறவுகளாம் ; இவர்களுடை வாழ்த்தே

     எப்போதும் ஊக்கத்தை ஆக்கத்தைத் தரும் !

கணியன்பூங் குன்றனார் கருத்துரைக்கு மாற்றாய்

      கழறுதமிழ் ஊரென்னூர் ; தமிழ்கற்றோர் கேளிர் !

                                                                       *பாதாசன்*

*அருஞ்சொல் விளக்கம் :-*

   கழறுதமிழ் : பேசுதமிழ்

    கேளிர் : நண்பர்