சீனரெலாம் ஒன்றிணைந்தே அமைத்தி ருக்கும்
சீனமொழிக் காப்புக்கோர் அமைப்பாம் *டோங்ஜோங்*
சீனமொழி இந்நாட்டில் நிலைப்ப தற்கும்
திடமாகக் காலூன்றி வளர்வ தற்கும்
ஆனமட்டும் தொண்டாற்றி வருவ தைநாம்
அறிந்திருப்போம் ; அதுபெரிதே அல்ல ; அஃதில்
சீனர்களின் *ம.சீ.ச,. ஜ.செ. க,.* வும்
சேர்ந்துள்ளார் மொழிகாக்க ! இதுதான் உச்சம் !
அரசியலில் *ஜ.செ.க , ம.சீ. ச.* வும்
அடிப்படையின் கொள்கைகளால் வேறு பட்டோர் ;
அரசியலில் இவ்விருவர் *எலி,பூ னையாம் !*
ஆனாலும் சீனமொழி என்னும் போழ்தில்
அரசியலுக் கப்பாலும் மொழியைக் காக்க
அனைவருமே *ஒன்றுபட வேண்டும்* என்று
முரசறைந்து வாழ்கின்ற *சீனர் நோக்கம்*
முழுவதையும் இந்தியர்கள் *உணர்தல் வேண்டும் !*
*மொழி* யென்னும் *விழி* காக்க ஒன்று சேர்ந்த
முக்கியப்பல் அரசியல்கட் சிக்குள் என்றும்
அழிக்கமுடி யாக்கொள்கை யோடி யங்கும்
*ஜ.செ.க. ம.சீ.ச* கட்சி கள்தாம்
விழிப்பாகச் செயல்படுமோர் *பி.எச்* கட்சி
மீதுள்ள பற்றாலும் அதிலி ணைந்தே
பழிசொல்ல முடியாத படியே நாளும்
பணியாற்றும் சீனர்களும் பலராய் உள்ளார் !
இப்படியே பலகட்சிக் குள்ளே சீனர்
எத்தனையோ பதவிகளில் இருந்தா லும்தான்
தப்படியே அடிக்காமல் மொழியைக் காக்கத்
தவறாமல் ஒன்றிணைந்து *டோங்ஜோங்* தன்னை
ஒப்பித்தம் மொழிபேணும் கொள்கைக் குள்ளே
ஓருயிராய்ச் – சதைநகமாய் – உயிர்மூச் சாக
எப்போதும் இணைந்திருக்கும் அழகைக் காணாக்
குருடர்களாய் இந்தியர்கள் உள்ளார் அந்தோ !
சீனரையும் மலாயரையும் மிஞ்சும் வண்ணம்
சிலகட்சி அல்ல ; பல கட்சி தம்மை
ஆனவரை அமைத்திருந்தும் *தமிழைக் காக்க*
அவர்கள் *ஒன்று படவிலையே சீனர் போல !*
தேனடைபோல் தமிழினிப்பைப் பேசிப் பேசித்
திகட்டவைக்கும் *வல்லாரும்* ஒன்றாய்க் கூடக்
காணலையே ! *தமிழ்காக்க டோங்ஜோங்* போன்று
கண்டிப்பாய் இந்தியரே *அமைப்பீர் இன்றே !*
*பாதாசன்*