தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 300 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ‘எவிடென்ஸ்’ என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. `இந்த கொலைகளில் 13 சம்பவங்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது,’ என்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த கதிர். தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 2016 முதல் டிசம்பர் 2020 வரையில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் ஆகியோர் கொல்லப்பட்டது தொடர்பாக எவிடன்ஸ் அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதுதொடர்பான தகவல் பெறப்பட்டிருக்கிறது. கடந்த 2021 ஜனவரி மாதத்தில் இருந்து இந்தத் தகவல்களை எவிடென்ஸ் அமைப்பு திரட்டி வந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 33 மாவட்டங்களிலிருந்து எஸ்.சி, எஸ்.டி கொலைகள் குறித்த தகவல் பெறப்பட்டிருக்கிறது. தகவல் பெறப்பட்ட 33 மாவட்டங்களில் 300 எஸ்.சி, எஸ்.டி மக்கள் சாதிரீதியாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தகவல் அளிக்காத 5 மாவட்டங்களையும் கணக்கிட்டு பார்த்தால் இந்த படுகொலை 340 முதல் 350 வரையில் நடந்திருக்கும் எனக் கணிக்க முடிகிறது,” என்கிறார் எவிடென்ஸ் கதிர். தொடர்ந்து பேசுகையில், “ மாதம் ஒன்றுக்கு சராசரியாக 5 முதல் 6 சாதி படுகொலைகளால் தலித் மற்றும் பட்டியல் பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றில் 29 படுகொலைகள் தூத்துக்குடி மாவட்டத்திலும் 28 கொலைகள் மதுரை மாவட்டத்திலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 கொலைகளும் நாகப்பட்டினத்தில் 19 கொலைகளும் கோயம்புத்தூரில் 17 கொலைகளும் நடந்துள்ளன.