புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைத்ததோடு, அதற்குரிய தலைவர், வெளிநாட்டுத் தமிழர்களின் பிரதிநிதிகள், அரசு சார் அலுவலர்கள் ஆகியோரை நியமனம் செய்ததோடு, வெளிநாடு வாழ் தமிழர் நல நிதியும் ஒதுக்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
உலகில் 70க்கும் மேற்பட்ட நாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், மொரீசியசு, ரீயூனியன், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்ந்தும் இந்நாடுகளில்கூட இந்தியத் தூதுவர்களாகத் தமிழர்களை இந்திய அரசு நியமிப்பதில்லை. இந்தக் குறையை போக்கும் வகையில் புலம்பெயர் தமிழர் நல வாரியமும், உலகத் தமிழ்ச் சங்கமும் செயல்பட்டு, அத்தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையுடன் உலகத் தமிழர்கள், தமிழக அரசின் இம்முயற்சியை வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.