உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழ்! சட்டத் தடையை நீக்குமாறு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள்

நீதிமன்றங்களில் மாநில மொழிகளின் பயன்பாட்டைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அனைத்து நீதிபதிகளிடமும் பேசி வருகிறேன். நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளில் வழக்காட அனைத்து நீதிபதிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்” என இந்திய அரசின் சட்டத்துறை அமைச்சர் கிரண்ரிஜிஜூ கூறியுள்ளது வரவேற்கத் தக்கதாகும்.

ஆனால், உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகள் நீதிமன்ற மொழியாக முடியாமல் சட்டத் தடை உள்ளது. மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர்தான் நியமிக்கப்படவேண்டும் எனவும், உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என 1975ஆம் ஆண்டு அவசர நிலை காலத்தில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. இதன்விளைவாக மாநில மொழிகள் உயர்நீதிமன்ற மொழியாக முடியாத நிலைமை நீடிக்கிறது. இந்தச் சட்டத்தை திருத்தினாலொழிய மாநில மொழிகள் அந்தந்த மாநிலங்களில் நீதிமன்ற மொழியாக முடியாது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே மாவட்ட நீதிமன்றங்கள் வரை தமிழ் வழக்காடு மொழியாகவும், தீர்ப்பு வழங்கப்படும் மொழியாகவும் இருந்து வருகிறது. ஆனால், உயர்நீதிமன்றத்தில் இந்த இடத்தைத் தமிழ் பெற முடியாதபடி மேற்கண்ட சட்டம் தடுக்கிறது. எனவே சட்ட அமைச்சர் தான் கூறியுள்ளதை நிறைவேற்ற வேண்டுமானால் இந்தச் சட்டத்தை உடனடியாகத் திருத்தவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.