கடந்த கால ஆட்சியில், தமிழக அரசின் சிஸ்டம் தவறாக உள்ளது. தற்போதிருக்கும் நிதிநிலைமையைப் பார்க்கும் போது எனக்கே சில நேரங்களில் தன்னம்பிக்கை தளர்கிறது என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழகம் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் தற்போதைய நிதிநிலைமை உள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடி முறைகேடாக செலவிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிட்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின் போது, வெள்ளை அறிக்கையை வெளியிட்டு அது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது, பொருளாதாரத்தை சீர்படுத்துவது என்பது அதிரடியான மாற்றம் மூலமே சாத்தியம். எத்தகைய மாற்றத்துக்கும் தமிழக அரசு தயாராக உள்ளது. பொதுவாகவே, தற்போதிருக்கும் சிஸ்டம் சரியில்லை. நிதிநிலைமையைப் பார்க்கும்போது எனக்கே சில நேரங்களில் தன்னம்பிக்கை தளர்கிறது. தமிழகத்தில் இக்கட்டான நிலையிலுள்ள நிதிநிலையை, அடுத்த 5 ஆண்டு காலத்தில் சரியாக்கிவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கடனை மானியங்களுக்காக செலவிட்டால் வட்டி அதிகரித்து கடன் சுமையும்உ யரும். அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட தவறான செலவு ரூ.1 லட்சம் கோடியாக உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்க இந்த வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை. இக்கட்டான இந்த சூழ்நிலையை சீரிய நிர்வாகம் மூலம் சரி செய்ய முடியும். தற்போதைய நிதிநிலைமை வரும் 5 ஆண்டுகளில் சரி செய்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.