மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா, ‘டாக்டர் அப்துல் கலாம்: நினைவுகள் ஒருபோதும் இறப்பதில்லை’ புத்தகத்தை ராமேஸ்வரத்தில் இன்று வெளியிட்டார். அப்துல் கலாம் இல்லம், மிஷன் ஆஃப் லைஃப் கேலரி அருங்காட்சியகம், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய நினைவிடம் ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சர் பார்வையிட்டார். விவேகானந்தர் நினைவிடத்தையும் அவர் பார்வையிட்டார். உலகப்புகழ் பெற்ற ராமேஸ்வரம் கோவிலில் அமித் ஷா வழிபாடு செய்தார். ராமேஸ்வரம் கோயில் பண்டைய, புகழ் வாய்ந்த சனாதன கலாச்சாரத்தின் அடையாளமாகும் . 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில் பகவான் ஸ்ரீராமன் சிவபெருமானை வழிபட்டார். ஆடித்திருவிழாவின் போது இங்கு தரிசனம் செய்வது மிகவும் அதிர்ஷ்டமான சிறந்த உணர்வாகும். நாட்டு மக்களின் நலனுக்காகவும், நாட்டின் செழிப்பிற்காகவும் நான் போலேநாத்திடம் பிரார்த்தனை செய்தேன் என்று அவர் தமது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ‘டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்: நினைவுகள் ஒருபோதும் இறப்பதில்லை’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
‘டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்: நினைவுகள் ஒருபோதும் இறக்கவில்லை’ என்ற நூல் வெளியிடப்பட்டதன் மூலம், நாடு முழுவதும் உள்ள வாசகர்கள் டாக்டர் கலாமை அறியவும், புரிந்துகொள்ளவும், பின்பற்றவும் நிச்சயமாக ஒரு வாய்ப்பைப் பெறுவார்கள் என்று அமித் ஷா தமது உரையில் குறிப்பிட்டார். இந்த நூல் இந்திய ராக்கெட், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் வரலாறு, இந்திய அரசியல் மற்றும் நிர்வாக அமைப்பின் அருமையான பிரதிநிதித்துவம் மற்றும் டாக்டர் கலாமின் விருப்பங்கள், கற்பனை தொடர்பான பல நிகழ்வுகளை விவரிக்கிறது என்று அவர் கூறினார். டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொடர்பான நிகழ்வுகள் குறித்த முழுமையான, நேர்மையான விளக்கம் இந்நூலில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ராமேஸ்வரத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த சாதாரண சிறுவன் இந்திய அரசியலின் மிக உயர்ந்த சிகரத்தை அடைந்ததற்கான போராட்டத்தைப் புரிந்துகொள்ள இந்த நூல் மிகவும் உதவியாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்தார். டாக்டர் கலாமின் இலக்கியம் மற்றும் கலை மீதான காதல், திருக்குறள் மற்றும் பாரதியார் கவிதைகள் பற்றிய அவரது அறிவுரைகள் மற்றும் அவரது வாழ்க்கையின் அறியப்படாத பல அம்சங்களை இந்த நூல் வாசகர்களுக்குத் தருகிறது என்று அவர் கூறினார். டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஒரு சிறந்த அணி வீரர் என்றும் அவர் தனது வாழ்க்கையில் மேலாண்மைக் கோட்பாடுகளை செயல்படுத்தினார் என்றும் திரு ஷா கூறினார்.
பிரம்மோஸ் பிரைவேட் லிமிடெடின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சிவதாணு பிள்ளையின் அனுபவத்தை இந்த புத்தகம் விவரிக்கிறது என்று திரு அமித் ஷா கூறினார். இதன்படி, எஸ்.எல்.வி 3-இ 01 தோல்வியுற்றபோது, ஒட்டுமொத்த அணியும் ஏமாற்றமடைந்தது. ஆனால் அணித் தலைவர் என்ற முறையில், டாக்டர் கலாம் அனைவரையும் எஸ்.எல்.வி 3-இ 02 க்கு தயாராக ஊக்குவித்தார். எஸ்.எல்.வி.3-இ02 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இந்தியாவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்றது. இதேபோல் அக்னி ஏவுகணை முதல்முறை ஏவப்பட்டபோது சில சிக்கல்கள் காரணமாக இரண்டு அல்லது மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. அப்போதும் ஒட்டுமொத்த அணியும் ஏமாற்றமடைந்தது. ஆனால் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களை ஊக்குவித்து ஏவுகணை ஏவப்படும் இடத்தில் ஒன்றரை மாதங்கள் தங்கி இரவு பகலாக உழைத்தார். வெற்றிகரமாக ஏவப்பட்ட பின்னர், அக்னி ஏவுகணை உலகம் முழுவதும் இந்தியாவின் ஏவுகணை சக்தியின் அடையாளமாக மாறியது. அப்துல் கலாம் தலைமையில் நாட்டில் 5 ஏவுகணைகள் தொடர்பாக மிகப்பெரிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பிருத்வி, அக்னி, ஆகாஷ், நாக், திரிசூல் ஆகிய ஐந்து ஏவுகணைகளின் பெயர்கள் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இயற்கை மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடையவர் என்பதைக் காட்டுகிறது. ஒரு விஞ்ஞானியின் ஆன்மா அறிவியல் மற்றும் ஆன்மீகத்துடன் இணைந்தால் மட்டுமே உலக நலனுக்காக பணியாற்ற முடியும் என்று திரு ஷா கூறினார்.
சிறந்த தேசபக்தர், விஞ்ஞானி மற்றும் மக்கள் குடியரசுத்தலைவர் என்று டாக்டர்ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்குப் புகழாரம் சூட்டிய மத்திய அமைச்சர், அப்துல் கலாம், 1995 ஆம் ஆண்டில் நாட்டின் நன்கு அறியப்பட்ட விஞ்ஞானியாக மாறினார் என்றும், 1997 ஆம் ஆண்டில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்றும் கூறினார். டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எளிமையை எடுத்துக் காட்டிய அவர், பாரத ரத்னா விருது பெறுவதற்காக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றபோது, அவர் மிகவும் பதற்றமாக இருந்தார், ஏனெனில் அவர் அணிந்திருந்த சூட், டை ஆகியவற்றை வசதியாக உணரவில்லை என்று கூறினார்.
ராக்கெட் மற்றும் விண்வெளித் துறையில் ஒரே ஆண்டில் பல வெற்றிகளை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்த மாபெரும் விஞ்ஞானியான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், 1998 ஆம் ஆண்டில் நாட்டின் எதிர்காலத்திற்கான தனது தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தார் என்று திரு அமித் ஷா கூறினார். “இந்தியா 2020: புதிய மில்லினியத்திற்கான ஒரு பார்வை” என்ற நூலில், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இந்தியாவின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சிக்கான வரைபடத்தைக் கோடிட்டுக் காட்டினார். இந்தப் புத்தகத்தில், டாக்டர் கலாம் நாட்டின் இளைஞர்கள்முன் மூன்று முக்கிய விஷயங்களை முன்வைத்தார், முதலில் – ஒரு தேசமாக இந்தியாவின் திறனை அங்கீகரித்து அதை முன்னிலைக்குக் கொண்டு வருவதன் மூலம் வளர வேண்டும். இரண்டாவதாக, தொழில்நுட்ப அடிப்படையிலான பொருளாதாரத்தை நாம் உருவாக்க வேண்டும். மூன்றாவதாக, சமநிலை வளர்ச்சி மாதிரியைப் பின்பற்றி, கிராமம்-நகரம், விவசாயம் – தொழில் ஆகியவற்றிற்கிடையேசமநிலையை ஏற்படுத்துவதன் மூலம், வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்த மூன்று விஷயங்களையும் உணர்ந்து வளர்ந்த நாடாக மாறும் திசையில் இந்தியா முன்னேறியுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார்.
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விண்வெளி தொழில்நுட்பத் துறைக்கு அடித்தளமிட்டார் என்றும், இன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையின் கீழ், 55 விண்கலத் திட்டங்கள், 50 செளுத்துவாகனத் திட்டங்கள், 11 மாணவர் செயற்கைக்கோள்கள், 1 வளிமண்டல மறு நுழைவு திட்டம், 104 செயற்கைக்கோள்களை செலுத்துதல் போன்ற சாதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை தெரிவித்தார். டாக்டர் அப்துல் கலாமின் கனவுகளை நனவாக்க, விண்வெளித் துறையில் ஸ்டார்ட்அப்கள் மற்றும் இளைஞர்களுக்கு புதிய கதவுகளை திரு மோடி திறந்துள்ளார். விண்வெளித் துறையில் இந்தியா முழு உலகையும் வழிநடத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அவர் கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் முன்முயற்சிகளால் விண்வெளி அறிவியலுக்கான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் கனவு நிச்சயமாக நனவாகும் என்றும், விண்வெளித் துறையில் இந்தியா முழு உலகையும் வழிநடத்தும் என்றும் திரு. ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், இந்தியாவின் சாதாரண குடிமகனை ஜனநாயகத்தின் மையத்திற்குக் கொண்டு வந்தார் என்றும், நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று, ஏழை மற்றும் அடித்தட்டு மக்களை ஜனநாயகத்தின் மையத்திற்குக் கொண்டு வருவதில் வெற்றி பெற்றுள்ளார் என்றும் திரு. அமித் ஷா கூறினார். ஜனநாயகத்தின் வேர்களுடன் இணைந்த ஒரு ஏழை, ஜனநாயகத்தின் உச்சத்தை அடையும் போது, ஜனநாயகம் ஏழைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, அவர்களின் வளர்ச்சி மற்றும் நலனில் கவனம் செலுத்துகிறது என்பதை இது காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா பேசுகையில், இன்றும், அப்துல் கலாமின் பெயர் வரும் போதெல்லாம், நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் மற்றும் மாணவர்களின் முகத்தில் புன்னகை தோன்றுகிறது. டாக்டர் அப்துல் கலாம் காட்டிய கனவுகள், நம்பிக்கைகள், உற்சாகம், நாட்டின் பிரகாசமான எதிர்காலம் குறித்த ஆர்வம் ஆகியவற்றின் புன்னகை இந்தப் புன்னகை என்றும், நாட்டின் எதிர்காலம் இந்தப் புன்னகையில் பிரதிபலிக்கிறது என்றார். ‘தூக்கத்தில் காண்பவை அல்ல கனவுகள், நம்மைத் தூங்க விடாதவைதான் கனவுகள்’ என்ற டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் வார்த்தைகளை நாடு முழுவதும் உள்ள இளைஞர்களும் மாணவர்களும் நினைவில் கொள்ள வேண்டும் என்று திரு ஷா கூறினார். ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தனது வாழ்நாள் முழுவதையும் கற்பித்தலில் செலவிட்டார், தனது கடைசி மூச்சில் கூட மேகாலயாவில் மாணவர்களுக்கு கற்பித்தார். இது அவரது அர்ப்பணிப்பின் அடையாளமாகும்.
மீனவர் குழுவிலிருந்து சர்வதேச விண்வெளிக் கிளபுக்கான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பயணம் மிகவும் ஊக்கமளிக்கிறது என்று திரு அமித் ஷா கூறினார். பள்ளியிலிருந்து திரும்பிய டாக்டர் கலாம், தனது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களின் கல்விக்காக பேருந்து நிலையங்களில் செய்தித்தாள்களை விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். டாக்டர் அப்துல் கலாமின் போராட்ட வெற்றியால்தான் செய்தித்தாள்களை விற்று வந்த ஒரு ஏழைக் குழந்தை செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியாக மாறும் பேறு பெற்றது என்றார். தென்னிந்தியாவின் கடைக்கோடி இடத்திலிருந்தும், ஏழ்மையான பொருளாதாரப் பின்புலத்திலிருந்தும் வந்தவருக்கு நாட்டின் முதல் குடிமகனாகும் பேறு கிடைத்தது என்று திரு ஷா கூறினார். அப்துல் கலாம் தனது வாழ்க்கையில் பல தேசிய மற்றும் சர்வதேச கௌரவங்களைப் பெற்றுள்ளார் என்று அவர் கூறினார். டி.ஆர்.டி.ஓ மற்றும் இஸ்ரோ வரலாற்றில் அப்துல் கலாமின் பெயர் எப்போதும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.
அப்துல் கலாம் தனது பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் தாழ்வாக பறக்கும் போர் விமானத்தை உருவாக்கும் திட்டத்தில் பணியாற்றியதாக மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா கூறினார். இந்தத் திட்டத்தை உருவாக்கும் போது, ஒரு போர் விமானி ஆக வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் தோன்றியது. அவர் ஒரு விமானியாக முயற்சித்தார். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும், அவர் தனது கனவைக் கைவிடவில்லை. 2002 ஆம் ஆண்டில் குடியரசுத்தலைவர் ஆன பிறகு, 2006 ஆம் ஆண்டில் சுகோய் போர் விமானத்தை இயக்கியதன் மூலம் தனது கனவை நிறைவேற்றினார். டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், ஏவுகணைகள் துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்தார் என்றும், அக்னி மற்றும் பிருத்வி ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவினார் என்றும் திரு ஷா கூறினார். 1998-ம் ஆண்டு இவரது தலைமையில் பொக்ரானில் வெற்றிகரமாக அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
மனிதநேயம்தான் மிகப்பெரிய மதம் என்பதை டாக்டர் கலாம் நிரூபித்துள்ளார் என்று திரு அமித் ஷா கூறினார். குடியரசுத் தலைவர் என்ற முறையில், டாக்டர் கலாம் பல ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் மக்கள் பின்பற்ற வேண்டிய இதுபோன்ற முன்னுதாரணங்களை உருவாக்கினார். ஒருமுறை கலாமின் குடும்பத்தைச் சேர்ந்த 52 பேர் குடியரசுத் தலைவர் மாளிகையில் 9 நாட்கள் தங்கியிருந்தனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் வசிப்பவர்கள் அரசு விருந்தினர்கள். ஆனால் டாக்டர் அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர்கள் 9 நாட்கள் தங்குவதற்கு ரூ .9.52 லட்சம் பில் தொகையை செலுத்திவிட்டார். கலாமின் இந்த செயல் பொதுவாழ்வில் வெளிப்படைத் தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஒருபோதும் மேதகு குடியரசுத் தலைவருடன் தன்னை இணைத்துக் கொண்டதில்லை. அதனால்தான் அவரை மக்கள் குடியரசுத் தலைவராக இந்திய மக்கள் இன்றும் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்கின்றனர் என்று அவர் கூறினார். டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தனது இதயத்தில் ராணுவத்தின் அதிகாரிகள் மற்றும் துணிச்சலான வீரர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்றும் அவர் கூறினார்.
அப்துல் கலாம் தனது ‘விங்ஸ் ஆஃப் ஃபயர்’ (அக்னிச் சிறகுகள்) என்ற புத்தகத்தில், எனக்கு குடும்பம் இல்லாததால் என் கதை என்னுடன் முடிந்துவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் இது உண்மையல்ல. டாக்டர் அப்துல் கலாமை நினைத்து எப்போதும் பெருமிதம் கொள்ளும் 140 கோடி இந்தியர்களும் அவரது குடும்பம். இந்திய வரலாற்றில், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவராகவும், விஞ்ஞானியாகவும், எளிமையாக வாழும் ஒருவராகவும், சிறந்த தேசபக்தராகவும் இந்தியாவின் ஒவ்வொரு குழந்தையாலும் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா கூறினார்.