சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது ஆதித்யா எல்1 விண்கலம்


இந்திய
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 எனும் விண்கலத்தை ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று முற்பகல் 11:50 மணிக்கு பி‌ எஸ் எல்‌வி சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்த விண்கலம் நான்கு மாதங்கள் பயணித்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலிருக்கும்  லக்ராஞ்ச்1 (எல்1) பகுதியை அடையும். அங்கிருந்து சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கும். ஆதித்யா எல்1 விண்கலத்தில் ஏழு ஆராய்ச்சிக் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவை சூரியனின் குரோமாஸ்பியர் அடுக்கு, ஃபோட்டோஸ்பியர் மற்றும் சூரியனின் வெளிப்பகுதியான குரோனா அடுக்குகளை ஆய்வு செய்யும்.

தொடர்ந்து விஞ்ஞானிகளிடையே உரையாற்றிய இஸ்ரோ தலைவர் திரு சோம்நாத், ஆதித்யா எல்1 வெற்றிகரமாக சரியான சுற்றுவட்டப் பாதையில் உள்ளதாகவும், அடுத்தடுத்த நிலைகளில் அதன் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு எல்1 பகுதியை நோக்கி பயணிக்கும்.

சந்தியான் 3 மூலம் நிலவில் தரையிறங்கியுள்ள லேண்டர் மற்றும் ரோவர் சிறப்பாக ஆராய்ந்து வருவதாகவும், ரோவர் வாகனம் வெற்றிகரமாக 100 மீட்டர் தூரம் பயணித்துள்ளது என்றும் இன்னும் இரண்டு நாள் அதன்பணியை மேற்கொண்டு அதன் பின் உறக்க நிலைக்குச் செல்லும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே உரையாற்றிய மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர்ஜிதேந்திர சிங், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சூர்யோதயம் தொடங்கியுள்ளது என்றும் நமது பிரதமர் கூறியதுபோல், வானம் நமது எல்லை என்ற நிலை மாறி விண்ணையும் தாண்டி இந்திய விண்வெளித் துறை பலசாதனைகள் படைத்து வருகிறது என்றார். இந்திய விண்வெளித் துறையை பிரதமர் சிறப்பாக வழிநடத்திவருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் ஆதித்யா எல்1 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கும்இஸ்ரோவின் அடுத்தடுத்த ஆராய்ச்சிகள் வெற்றிபெறவும் வாழ்த்துகள் தெரிவித்தார்.