கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் சாத்தியமில்லை என்று டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் குழந்தை நுரையீரல் நிபுணர் டாக்டர் திரேன் குப்தா தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய டாக்டர் திரேன் குப்தா, “எதிர்பார்க்கப்படும் மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு கடுமையான கோவிட் பாதிப்பு ஏற்படசாத்தியமில்லை. குழந்தைகள் பாதிக்கப்படப் போகிறது என்பதற்கு எந்தத் தரவும் இல்லை, ஏனெனில் குழந்தைகளுக்கு உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்”என்று அவர் கூறினார். உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் ஒரு நிறுவனத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவும், கொரோனா தொற்றுநோயின் மூன்றாவது அலையில் குழந்தைகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற கவலை வளர போதுமான தரவு இல்லை என்று கூறியது. தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தால் (என்ஐடிஎம்) அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு, ஒருவேளை அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பாதிப்பட்டால் அவர்களுக்கான குழந்தைகள் மருத்துவ வசதிகள், மருத்துவர்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற உபகரணங்கள் பெரியவருக்கு இருப்பது போல குழந்தைகளுக்கு அருகில் இல்லை என்பதால் ஆபத்து இருக்கும் என்று கூறியுள்ளது.