பல்வேறு நாடுகளிலும், புதிய வகை உருமாறிய கோவிட்19 தொற்றான ஓமைக்ரான் பாதிப்பு காணப்படுவதால் எழுந்துள்ள நிலைமையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் ஆயத்தநிலை குறித்த ஆய்வுக்கூட்டம், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு.ராஜேஷ் பூஷன் தலைமையில், நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் முன்னிலையில், புதுதில்லியில் இன்று நடைபெற்றது. மத்திய – மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் திரு.ராஜேஷ்பூஷன், மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஆலோசனைகளைத் தவறாது பின்பற்றுமாறு வலியுறுத்தினார். வெளிநாடுகளிலிருந்து, வாண், கடல் மற்றும் தரைவழியாக வரும் பயணிகளின் உடல்நிலை குறித்து தீவிரமாகக் கண்காணிக்குமாறும் கேட்டுக் கொண்டார். பரிசோதனை, பின்தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் சிகிச்சையளித்தல் என்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருபோதும் கைவிட்டுவிட வேண்டாம் எனவும், மாநில அரசுகளுக்கு இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. உருமாறிய ஓமைக்ரான் தொற்று, ஆர்டிபிசிஆர் மற்றும் ராபிட் ஆண்டிஜென் பரிசோதனைகளிலிருந்து தப்பிவிடாது என்பதால், பரிசோதனைகளை அதிகரிப்பதோடு, பாதிப்பு அறிகுறி உடையவர்களை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கமாறும் மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மொத்தமாக அதிகளவில் தொற்று பரவ வாய்ப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, உரிய நேரத்தில் நிலைமையை திறம்பட கையாளுமாறும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தினார். தொற்று பரவல் அதிகரித்தால், சிகிச்சைக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வதோடு, போதுமான மருந்துப் பொருட்களை கையிருப்பு வைத்திருப்பதுடன், வீட்டுத் தணிமையில் இருப்பவர்களை முறையாக கண்காணிக்குமாறும், மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டது. கோவிட்-19 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அனைத்து மாதிரிகளையும், மரபணு பரிசோதனைக்ககாக இன்சாகாக் ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பிவைப்பதுடன், உரிய நேரத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றி, நிலைமையை திறம்பட கையாளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதிசெய்யும் விதமாக, வீடு தேடிச்சென்று தடுப்பூசி போடும் இயக்கத்தை, டிசம்பர் 31-ந் தேதி வரை நீட்டிக்குமாறும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளையும், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு.ராஜேஷ் பூஷன் கேட்டுக் கொண்டார்.