நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை கிராமத்தில் இன்று நடைபெற்ற நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் 12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் டாக்டர் எல் முருகன் பயனாளிகளுக்கு வழங்கினார்.
விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டைகள், மாணவர்களுக்கான கல்வி கடன், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழிற்கடன் மற்றும் கால்நடை வளர்ப்புக்கான கடனுதவிகளையும் கனரா வங்கி, நபார்டு வங்கி மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி ஆகியவை மூலம் வழங்கப்பட்டன. மேலும் அப்பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்திற்கான பயனாளிகள் பதிவு எண்ணெய் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டன.வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. அஞ்சல் துறை சார்பாக செல்வமகள் சேமிப்பு திட்டம் பயனாளிகளுக்கு புதிய கணக்குகள் தொடங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எல். முருகன், மத்திய அரசு, சமூகத்திலிருக்கும் அனைத்து பிரிவினரும் முன்னேற தேவையான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றார். பழங்குடியினர் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு, குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினருக்கான பிரதமரின் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ. 24,104 கோடி ஒதுக்கியுள்ளது என்றார்.
2023-24-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, “பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்காக, குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினருக்கான குடியிருப்புகள், தூய்மையானகுடிநீர், சுகாதாரம், மேம்பட்ட கல்வி, ஊட்டச்சத்து, சாலைவசதி மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை வழங்கும் என்றார். பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.