அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை கொளத்தூர், பெரம்பூரில் வளர்ச்சியடைந்த பாரத லட்சிய யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்பு

நாட்டின் 140 கோடி மக்களின் கனவுகளும், அவர்களது கடுமையான உழைப்பும் இந்தியாவை வளர்ந்த நாடாகமாற்றும் என்று மத்திய தொழில், வர்த்தகம், உணவு, நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம் மற்றும்ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில், நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரத யாத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், ஒருவர் பட்டினியுடன் கனவு காண முடியும் என்றும், அதேசமயம் பட்டினியுடன் செயல்படமுடியாது என்றும் கூறினார். இதனால்தான், ஒரு குழந்தை கூட பட்டினியுடன் தூங்கச்செல்லக்கூடாது என்றுஎண்ணத்தில் பிரதமர் மோடி, 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்களை வழங்கி வருகிறார் என்று அவர்தெரிவித்தார். தமிழ்நாட்டில் 3.6 கோடி பேருக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன என்றுஅவர் கூறினார்.

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையில் செயல்படுத்தப்பட்டு வரும், ஆயுஷ்மான் பாரத், உஜ்வாலா, பிரதமரின்வீட்டு வசதி திட்டம், கிராமப்புற சாலைகள் திட்டம் உள்ளிட்ட 17 மக்கள் நலத்திட்டங்கள் மூலம் அனைத்துமக்களும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில், நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரைநடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இத்திட்டங்களின் பயன்களை ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இந்தயாத்திரையின் நோக்கம் என்று அவர் கூறினார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் ஒவ்வொருவரும்பயனடையும் வகையில் இந்த யாத்திரை மக்களின் வீட்டு வாசலுக்கு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாடு மிகவும் செழுமையான கலாச்சாரமும், பாரம்பரியமும் நிறைந்த மிகச்சிறந்த மாநிலம் என்று கூறியதிரு பியூஷ் கோயல், மாநிலத்தின் இலக்கிய வளத்தால் நாடு பெருமையடைகிறது என்று தெரிவித்தார். மகாகவிசுப்பிரமணிய பாரதியார் தனது எழுத்து மற்றும் பாடல்கள் மூலம் இந்தியாவின் பெருமையை உலகுக்குஎடுத்துரைத்தார் என்று அவர்கூறினார்.

சர் சி.வி.ராமன் போன்ற சிறந்த விஞ்ஞானிகளை தமிழ்நாடு  உருவாக்கியதாக அவர் கூறினார். ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி  தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று சுட்டிக்காட்டிய அவர், மாநிலத்தில் அளப்பரிய திறமைகளுடன் மறைந்திருக்கும் மாணிக்கங்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதில்நாம் தவறக்கூடாது என அவர் கூறினார்.

ஒவ்வொரு குடும்பமும் சமையல் எரிவாயு வசதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று பிரதமர் விரும்புவதாகவும், ஸ்வநிதி திட்டத்தின் மூலம், கிட்டத்தட்ட அனைத்து சாலையோர வியாபாரிகளும் பயன் பெற்றுள்ளனர் என்றும்அவர் தெரிவித்தார். ஒரு காலத்தில், சாலையோர வியாபாரியாக இருந்த பிரதமருக்கு, தொழில் செய்வதுஎவ்வளவு கடினம் என்பது நன்றாகத் தெரியும் என்றும், அதனால்தான், சாலையோர வியாபாரிகள் வீட்டு வாசலில்கடன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்வநிதி திட்டத்தை அவர் தொடங்கியதாகவும் அமைச்சர் கூறினார். தமிழகத்தின் அனைத்து நகரங்களையும் சேர்ந்த சாலையோர வியாபாரிகளுக்கும் கடன் வழங்க, வங்கிகள்சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவை வளர்ச்சியடைந்த சூப்பர் பவர் நாடாக மாற்றும் லட்சியத்தை நிறைவேற்ற , நாம் அனைவரும்செயல் வீரர்களாக மாறி, நமது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில், மத்திய அரசின் திட்டங்கள் மூலம் கடன் பெற்று, தொழில் முனைவோராக மாறிய பயனாளிகளின்வெற்றிக் கதைகள் மற்றும் அனுபவங்களை அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் பெரம்பூரில் நடைபெற்ற நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரத யாத்திரை நிகழ்ச்சியில் பேசியஅமைச்சர், மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களின் பயன்களைப் பெற மக்கள்முன்வரவேண்டும் என்றும், இதற்கு இந்த யாத்திரையில் கலந்து கொண்டு, தங்களது பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம், மத்திய அரசின்திட்டப்பயன்களைப் பெற்று, தங்கள் குடும்பங்களைப் பொருளாதார ரீதியில் வலுப்படுத்த முடியும் என்றும் அவர்கூறினார்.

இரு நிகழ்ச்சிகளிலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் ஶ்ரீமதி ஶ்ரீதர், இந்தியன் வங்கி செயல்இயக்குநர் மகேஷ் குமார் பஜாஜ், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர்மா.அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.