மத்திய கல்வி அமைச்சகம் புதுச்சேரி ஆரோவில்லில் ஏற்பாடு செய்திருந்த ஒரே பாரதம் உன்னத பாரதம் முகாம் நிறைவு விழா இன்று மாலை நடைபெற்றது. ஆரோவில் அறக்கட்டளையின் செயலர் டாக்டர் ஜெயந்தி ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். ஆரோவில் அமைதியான ஆன்மீக மையம். இங்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து இளைஞர்கள், மாணவர்கள் வருகை புரிய வேண்டும். சேவை மனப்பான்மை உள்ளவர்கள் இங்கு தன்னார்வத் தொண்டு ஆற்றலாம். மாணவர்கள் இங்கு தங்கி இருந்து படிப்பிடை பயிற்சி மூலம் அரவிந்தர் மற்றும் அன்னையின் கருத்துகளைப் பயிலலாம். அறிஞர்களுக்கு உதவித்தொகை (ஃபெலோஷிப்) திட்டமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று டாக்டர் ஜெயந்தி ரவி தெரிவித்தார். முன்னதாக பங்கேற்ற மாணவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பலரும் ஆரோவில் அனுபவம் வித்தியாசமாக இருந்ததாகத் தெரிவித்தனர். அருணாசலப் பிரதேசத்தில் உள்ள இராஜீவ் காந்தி பல்கலைக்கழக மாணவர் பிங்கே ஓரி தன்னார்வமாக ஆரோவில்லின் மாணவர் தூதராகத் தான் செயல்பட உள்ளதாகத் தெரிவித்தார். இந்த ஒரே பாரதம் உன்னத பாரதம் முகாமில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 100 மாணவர்கள் கலந்து கொண்டனர்.