சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவரான திரு பிரேம் வத்சாவை நிறுவனராகக் கொண்ட ஃபேர்பேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்ற கனடா நாட்டு நிதிநிறுவனம், சென்னை ஐஐடி -ன் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் அமெரிக்க டாலரை ஆராய்ச்சி மானியமாக வழங்க உள்ளது. (இந்திய மதிப்பில் சுமார் ரூ.41 கோடி) 1971-ல் சென்னை ஐஐடி -ன் ரசாயனப் பொறியியல் பாடத்தில் முதல் வகுப்பில் பட்டம் பெற்ற திரு பிரேம் வத்சாவுக்கு 1999-ம் ஆண்டு சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது வழங்கப்பட்டது. சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம் 2022 மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் மனித மூளை தரவு, அறிவியல் வெளிப்பாடு, தொழில்நுட்பக் கருவிகள் ஆகியவற்றைக் கொண்டு மனித மூளையை செல்லுலார் மட்டங்களில் படம்பிடிக்க ஒரு உலகளாவிய லட்சியத் திட்டத்தை இந்த மையம் செயல்படுத்தி வருகிறது. இந்த மையத்தில் நடைபெற்று வரும் ஆராய்ச்சிப் பணிகளைப் பாராட்டிப் பேசிய ஃபேர்ஃபேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனரும், தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான திரு பிரேம் வத்சா, “சென்னை ஐஐடி -ன் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தில் பணியின் தரமும், குழுவினரின் அர்ப்பணிப்பும் உண்மையிலேயே மிகச் சிறப்பானதாகும். மனித மூளையின் உயர் தெளிவுத்திறன் படத் தொகுதிகளை உருவாக்கும் தொழில்நுட்பத் தளம் மிகவும் தனித்துவமான ஒன்றாகும். மனித மூளை பற்றிய நமது அறிவாற்றலை மேம்படுத்துவதிலும் மிகச் சவாலான மூளை நோய்களுக்கான தீர்வுகளுக்கு வழிவகுக்கும் நுண்ணறிவை மேம்படுத்துவதிலும் இந்த மையம் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும்” எனக் குறிப்பிட்டார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், சென்னை ஐஐடி -ன் சிறப்புமிக்க முன்னாள் மாணவருமான திரு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, “சென்னை ஐஐடி -ன் மூளை மையத்தில் திரு பிரேம் வத்சா ஆற்றிவரும் பங்களிப்பு பாராட்டுக்குரியது. இந்த மையம் ஏற்கனவே பல்வேறு தொண்டு நிறுவனங்களின் நிதி மற்றும் சிஎஸ்ஆர் பொறுப்புணர்வு நிதியின் மூலம் ஆதரவைப் பெற்றிருக்கிறது” என்றார். “சென்னை ஐஐடி -ன் அதிநவீன பணிக்கான இந்த நன்கொடை இந்திய- கனடா ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி” என பேராசிரியர் மார்த்தி வெங்கடேஷ் மன்னார், பேராசிரியர் பார்த்தா மோகன்ராம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.தாராளப் பங்களிப்பை வழங்கிய திரு பிரேம் வத்சாவுக்கு நன்றி தெரிவித்துள்ள சென்னை ஐஐடி -ன் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நூலா கூறும்போது, “மூளை தொடர்பான புரிதலுக்காக நடைபெறும் முக்கியமான முன்முயற்சிக்கு சென்னை ஐஐடி-க்கு திரு பிரேம் வத்சா அளித்துவரும் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.“திரு பிரேம் வத்சாவின் இந்த தாராளமான ஆதரவு, உலகளவில் முன்னணி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக மாறுவதற்கான எங்களது பணியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்” என்று சென்னை ஐஐடி சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தின் தலைவர் பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம் தெரிவித்தார்.