சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகம், கோவையில் உள்ள கேஎம்சிஎச் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து நீரின் தரம் குறித்த படிப்பை இணைய வழியில் வழங்குகிறது. இந்த நான்கு மாத காலப் பாடவகுப்பு அறிவியல், பொறியியல் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கும், நீர் தரத்தில் ஆர்வம்கொண்ட தொழில்நுட்பப் பின்னணி உடையவர்களுக்கும் ஏற்றதாகும். இந்திய அளவிலும், உலக அளவிலும் நீர் வரைபடத்தை மாணவர்களைக் கொண்டு உருவாக்கும் பணியில் பாடத்திட்ட அமைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நீரின் தரம் குறித்த அடிப்படை அம்சங்களின் விரிவான அறிமுகத்திற்குப் பின், ஆய்வுகள் உள்பட நடைமுறை சோதனைகளை மாணவர்கள் நடத்துவார்கள். பாடத்திட்ட காலம் நிறைவடைந்ததும் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். கல்வி நிறுவனங்கள் தங்களது பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக இந்த சான்றிதழையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு 2024, ஜூலை 20அன்று முடிவடையும். ஆர்வமுடைய விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணைப்பின் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் https://bit.ly/3zgpkMyபாடவகுப்பு 2024ஜூலை 29 அன்று தொடங்கும். சென்னை ஐஐடி பேராசிரியர்களான டி.பிரதீப், லிகி பிலிப், டெல் அவிவ் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் ஃபிஷ்மேன், கேஎம்சிஎச் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் டாக்டர் ஜி.வேல்முருகன் ஆகியோர் இப்பாடத்திட்டத்தின் பயிற்றுநர்களாக செயல்படுவார்கள். இவர்கள் தவிர சென்னை ஐஐடி, பிஏஆர்சி, பர்டியூ பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விருந்தினர் பேராசிரியர்களும் பணியாற்றுவார்கள்.