நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலகம் 43-வது அமைப்பு தினத்தை கொண்டாடியது

நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலகம் 43-வது அமைப்பு தினத்தை சென்னையில் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே ஆர் பெரியகருப்பன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன், இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் திருமதி உமா சங்கர், இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் திரு பிரஜேஷ் குமார் சிங், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரும், ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான டாக்டர் என் சுப்பையன் ஆகியோரும்  இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல தலைமைப் பொதுமேலாளர் திரு ஆர் ஆனந்த் கடந்த 40 ஆண்டுகளில் வங்கியின் சாதனைகள் பற்றி எடுத்துரைத்தார். வரும் ஆண்டுகளில் மேலும் வளர்ச்சியை எதிர்பார்ப்பு நிதியாண்டு 2024-ல் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு ரூ.46,423 கோடியை நபார்டு வங்கி வழங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஊரகப் பகுதி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கத்துடன், தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்கும் பணியில் நபார்டு தற்போது ஈடுபட்டிருப்பதாக அவர் கூறினார். தமிழ்நாட்டின் முன்னுரிமைத் துறைகள் திட்டத்தின் கீழ், 2025-ம் நிதியாண்டுக்கு நபார்டு வங்கி ரூ. 8.34 லட்சம் கோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வின், தலைமை விருந்தினராக பங்கேற்று பேசிய தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே ஆர் பெரியகருப்பன், கூட்டுறவு, ஊரக வங்கி நடைமுறைகளை  வலுப்படுத்துவதில் நபார்டு வங்கியின் பங்களிப்பைப் பாராட்டினார். 4 ஆயிரத்து 500-க்கும் அதிகமான தொடக்க வேளாண் கடன் சங்கங்களை ரூ.195 கோடி செலவில் கணினி மயமாக்குவது  முக்கியமான மைல்கல்லாகும் என்று அவர் கூறினார்.

நீடித்தத் தன்மை, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், இ- வணிகம், திறன் கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாநிலத்தை மாற்ற வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் இலக்கை நிறைவேற்ற நபார்டு வங்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு, புதுச்சேரியில் சிறப்புமிக்க பணிகளைச் செய்த பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள். கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

2024-25 நிதியாண்டுக்கு “வேளாண்மை, அதுசார்ந்த செயல்பாடுகளில் முதலீடுகள்” என்பது பற்றிய புத்தகத்தை வெளியிட்ட அமைச்சர்,  6 மாதத்தில் இருந்து ஒரு வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்குவதற்கு ஐயம்பாளையம் வேளாண் உற்பத்தி நிறுவனம்  தயாரித்துள்ள “பேபி பிளண்ட்” என்ற உணவுப் பொருளையும் அறிமுகம் செய்தார்.