சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ நிறுவனத்தில் ஒரு வாரம் – ஒரு கருப்பொருள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தோல் தொழில்நுட்பக் கண்காட்சி நடைபெற்றது

ஒரு வாரம் ஒரு கருப்பொருள் இயக்கத்தில் ரசாயனங்கள், பெட்ரோகெமிக்கல்கள் தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு மத்திய தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் சென்னையில் செயல்படும் மத்திய தோல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ) 2024 ஜூலை 16, 19, 20 ஆகிய தேதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 2024 ஜூலை 16 அன்று பிரமாண்டமான தொடக்க விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குழு விவாதம் நடைபெற்றது.

19 ஜூலை 2024 அன்று இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தகவல் வழங்கும் வகையிலும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும் உரை அமர்வுகள் இடம்பெற்றன. சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ-யின் இயக்குநர் டாக்டர் கே.ஜே.ஸ்ரீராம் வரவேற்புரை நிகழ்த்தினார். பல்வேறு பள்ளி  கல்லூரி மாணவர்கள், தொழில்துறையினர் இதில் கலந்து கொண்டனர். பொதுமக்களிடையே தோல் தொழில் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வருதல், கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல் ஆகியவை குறித்து டாக்டர் கே.ஜே.ஸ்ரீராம் பேசினார். வரவேற்புரையைத் தொடர்ந்து, தோல் தொழில் துறையினரின் உரைகள் இடம்பெற்றன.

2024 ஜூலை 19, 20 ஆகிய தேதிகளில் தோல் தொழில்நுட்ப கண்காட்சியும் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கும்  மாணவர்களுக்கும் பல்வேறு வகையான தோல், தோல் பொருட்கள் குறித்த செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.

அத்துடன் இந்நிறுவனத்தில் அமைந்துள்ள தோல் அருங்காட்சியகம் 2024 ஜூலை 19, 20 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. தோல் அருங்காட்சியகம் கடந்த மூன்று நூற்றாண்டுகளின் தோல் கலைப்பொருட்களின் சேகரிப்பைக் காட்சிப்படுத்துகிறது. தோல் குவளைகள், பைகள், ஆடைகள், காலணிகள், இசைக்கருவிகள் போன்ற பல்வேறு வகையான பொருட்கள் இதில் அடங்கும்.  இரண்டு நாட்களிலும் சுமார் 700 பார்வையாளர்கள் இதைப் பார்த்தனர்.