சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் செயல்பட்டு வரும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்திற்குட்பட்ட மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம், அதிக உற்பத்தியை ஈட்டக்கூடிய புதிய வகை இறால் மீன் வளர்ப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. மத்திய மீன்வளத்துறையின், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்ட நிதியுதவியுடன், இந்தப் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நவீன முறையில், உயர் அழுத்த பாலிஎத்திலீன் தண்ணீர் தொட்டிகளில், இறால் மீன் வளர்க்கப்படுகிறது. இந்த முறையில், ஒரு ஹெக்டேர் பரப்பில் 3 சாகுபடி சுற்றுக்களில், ஆண்டுக்கு 100 – 120 டன் இறால் மீன்களை உற்பத்தி செய்யலாம். குறைந்த செலவில், குறைந்த நிலபரப்பில், குறைவான தீவனம் மற்றும் எரிசக்தியைப் பயன்படுத்தி, அதிக உற்பத்தி ஈட்டுவதன் மூலம், இறால் மீன் வளர்ப்புத் தொழிலை ஒரு நீடித்த தொழிலாக மேற்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.
முட்டுக்காட்டில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் முன்னிலையில், இந்தப் புதிய தொழில்நுட்பம் குறித்து, மீன்வளர்ப்புத் தொழில்துறையினருக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய அமைச்சர் ஜார்ஜ் குரியன், இறால் மீன் வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், இந்தப் புதிய தொழில்நுட்பத்தை பெருமளவில் பின்பற்றி, இந்திய இறால் மீன் வளர்ப்புத் தொழில்துறையை முன்னேற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது, மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், டிஜிஃசேப் காப்பீட்டு நிறுவனம் உருவாக்கியுள்ள, 3-வது இறால் மீன் காப்பீட்டுத் திட்டத்தையும் அமைச்சர் ஜார்ஜ் குரியன் தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதியில், தற்போது இறால் மீன்கள் மட்டும் 70% பங்களிப்பை வழங்குவதுடன், ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் மெட்ரிக் டன் இறால் மீன்கள் உற்பத்தி செய்யப்பட்டு, ரூ.46,000 கோடி மதிப்புள்ள இறால் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சரால் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம், இறால் மீன் வளர்ப்புத் தொழிலுக்கு பெரும் ஊக்கமளிப்பதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தின் இயக்குநர் குல்தீப் குமார் லால் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.