ஜார்க்கண்டில் ஆதிவாசிகளுக்கான உதவித் திட்டங்கள் ADIGRAMS குறித்த இரண்டு நாள் பயிலரங்கை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது

பழங்குடியினர் விவகார அமைச்சகம் (MoTA) அதன் ‘மக்கள் தொடர்புத் திட்டத்தின்’ ஒரு பகுதியாக, அரசு திட்டங்களை முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து அடித்தட்டு நிலையில் உள்ள மக்களுக்குச் சென்றடையும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 27 மற்றும் 28-ம்  தேதிகளில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள  முக்கியப் பணியாளர்களுக்கு ADIGRAMS (ஆதிவாசி மானிய மேலாண்மை அமைப்பு) குறித்த இரண்டு நாள் பயிற்சியை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம்  ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள  அமைச்சகத்தின் ‘திட்ட வளாகத்தில்’ நடைபெற்றது. பழங்குடியினர் திட்ட அமலாக்கத்துடன் தொடர்புடைய 66 முக்கிய அதிகாரிகள், மாவட்ட நல அலுவலர்கள், மாநிலம் முழுவதும் உள்ள 24 மாவட்டங்களிலிருந்தும் திட்ட மேலாண்மை பிரிவு (PMU) மற்றும் ஒருங்கிணைந்த பழங்குடியின மேம்பாட்டுத் திட்ட அதிகாரிகள் ஆகியோர் இந்த பயிற்சியில் தீவிரமாக பங்கேற்றனர். அவர்களுக்கு, தரவுகளை பதிவேற்றம் செய்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.

ADIGRAM என்பது மாநிலங்களுக்கு அமைச்சகம் வழங்கும் மானியங்களின் பயன்பாடுகள் குறித்த நேரடி மற்றும் நிதிசார்  முன்னேற்றத்தைக் கண்காணிக்கும்  தனித்துவமான இணையதளம் என்று பழங்குடியினர் விவகார  அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டாக்டர் நவல் ஜித் கபூர் தெரிவித்தார். பயனாளிகள் குறித்த  விவரங்களும் இந்த இணையதளத்தில்  பதிவேற்றம் செய்யப்பட்டு உள்கட்டமைப்பு திட்டங்கள் ஜியோடேக் செய்யப்பட்டுள்ளன. 2017-18-ம் ஆண்டு முதல் 2021-22-ம் ஆண்டு வரையிலான தரவுகள்  பதிவேற்றம் செய்யப்பட்டவுடன், அது தொடர்பான தகவல் பொது களத்தில் வைக்கப்படும். இது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வைக் கொண்டுவரும். மஹாராஷ்டிரா, ஹிமாச்சல், சத்தீஸ்கர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் அமைச்சகத்தால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அங்கு MoTA மற்றும் UNDP இன் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவால் பயிற்சி நடத்தப்படுகிறது.