சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான நடவடிக்கையாக புதுவை பல்கலைக்கழகத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு

புதுவை பல்கலைக்கழகம் அதன் வெள்ளி விழா வளாகத்தில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்வின் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. 104 மரங்களை வேரோடு சாய்த்த ஃபெங்கல் சூறாவளி காரணமாக இழந்த பசுமையை மீட்டெடுப்பதும், வளாகத்தில் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதும் இந்த முயற்சியின் நோக்கமாகும். இதன் ஒரு பகுதியாக 1,040 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியை, தலைமை விருந்தினரான புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் மற்றும் புதுவை பல்கலைக்கழகத்தின் முதன்மை தாளாளர்  கே கைலாஷ்நாதன், இஆப (ஓய்வு), தொடங்கி வைத்தார். அவர்  தனது உரையில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் இயற்கை பேரழிவுகளின் விளைவுகளை சமாளிப்பதில் காடு வளர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுப்பதில் பல்கலைக்கழகம் எடுத்த முயற்சிகளுக்கான பாராட்டுகளை அவர் தெரிவித்தார். இவ்விழாவில் கெளரவ விருந்தினர்களாக சட்டப்பேரவை உறுப்பினர் பி.எம்.எல். கல்யாணசுந்தரம், புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க. தரணிக்கரசு கலந்துகொண்டனர்.

 பல்கலைக்கழகத்தின் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பை ஒரு முக்கிய மதிப்பாக பேராசிரியர் க. தரணிக்கரசு, மீண்டும் வலியுறுத்தினார். 1,000 மரக்கன்றுகளை நடுவது மட்டுமின்றி எதிர்கால சந்ததியினருக்கான பசுமை வளாகத்தை உருவாக்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பணியாகும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், மரக்கன்றுகளை நடுவதில் உள்ள கூட்டு முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலைத்தன்மைக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்த முன்முயற்சியில், புதுவை பல்கலைக்கழகத்தின் தலைமைத்துவம் கல்வியுடன் ஒருங்கிணைந்து, சமூகத்தை நிலையான எதிர்காலத்தை நோக்கி அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவிக்கிறது என்றார்.

 சிறப்பு அழைப்பாளராக, புதுச்சேரி அரசின் வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் டாக்டர் அருள்ராஜன், இவப., பிராந்திய பல்லுயிர் பெருக்கத்தை பராமரிப்பதிலும், பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைப்பதிலும் காடு வளர்ப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

 பசுமை வளாகத்தின் சிறப்பு அதிகாரி, டாக்டர் மதிமாறன் நடராஜன், தோட்ட இயக்கத்தின் உத்திசார் முக்கியத்துவம் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கினார். ஃபெங்கல் சூறாவளியால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி அவர் கூறுகையில், “இந்த முயற்சி, இழந்த மரங்களை மாற்றுவதை விட அதிகம்; இது ஒரு நிலையான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதாகும்” என்றார். சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பல்கலைக்கழகத்தின் பரந்த பார்வையையும் அவர் வலியுறுத்தினார்.

 இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் (கலாச்சாரம் மற்றும் கலாச்சார உறவுகள்), பேராசிரியர் கிளமெண்ட் லூர்ட்ஸ், பதிவாளர் (பொறுப்பு),பேராசிரியர் ரஜ்னீஷ் புடணி, பல்கலைக்கழக நூலகர், பேராசிரியர் விஜயகுமார், ஆசிரியர்கள், ஆசிரியைகளும், அதிகாரிகள், மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.