தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின்  விஷோநெக்ஸ்ட் முன்முயற்சி -இந்தியாவில் ஆடை வடிவமைப்பு  வர்த்தக சந்தையை ஊக்குவிக்கிறது

விஷோநெக்ஸ்ட் (VisioNxt) என்ற தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் முன்முயற்சி இந்தியாவில் ஆடை வடிவமைப்பு சில்லறை வர்த்தக சந்தையை ஊக்குவிக்கிறது. இது பல்வேறு பாடத்திட்டங்கள், பயிற்சி பட்டறைகள், நவீன கால ஆடை வடிவமைப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), உணர்ச்சிசார் நுண்ணறிவு (Emotional Intelligence) ஆகியவற்றை இணைப்பதன்  மூலம் விஷோநெக்ஸ்ட் ஒரு உள்நாட்டு ஆடை வடிவமைப்பு சந்தை பற்றிய முன்கணிப்பு முறையை உருவாக்கி உள்ளது. இது இந்திய சந்தையின் தனித்துவமிக்க செயல்பாட்டுக்கு ஏற்ற சிறப்பம்சமாகும். இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையையும், பன்முக பண்பாட்டையும் மனதில் கொண்டு நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப செயல்படுவதே இதன் அடிப்படை நோக்கமாகும்.

2024 -ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி ஜவுளித்துறை அமைச்சரால் “பரிதி 24×25” என்ற முதல் ஆடை வடிவமைப்பு தொடர்பான இருமொழி புத்தகமும், அதற்குரிய இணையதளமும் தில்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது.. விஷோநெக்ஸ்ட்-ன் முன்கணிப்பு (Forecasting and Trend Analysis) சேவையானது

•    உலகளாவிய முன்கணிப்பு சேவைகளை சார்ந்திருப்பதை குறைத்துள்ளது.

•    இந்திய நுகர்வோரின் தனித்துவமான தன்மை மற்றும் தேவைகளை உணர்ந்து உரிய ஆலோசனைகளை வழங்குகிறது.

•    தகவல் தொழில் நுட்பத்தில் இந்தியாவின் பலத்தை உலக ஜவுளி வர்த்தகத்துடன் ஒருங்கிணைக்கிறது.

•    செயற்கை மற்றும் மனித நுண்ணறிவை இணைக்கிறது.

விரிவான தரவுத்தொகுப்பு: விஷோநெக்ஸ்ட், 70,000-க்கும் மேற்பட்ட முதல் நிலை ஆடை படங்கள் மற்றும் 280,000-க்கும் அதிகமான இரண்டாம் நிலை படங்கள் அடங்கிய தரவுத்தொகுப்பை உருவாக்கியுள்ளது. இது நவீன முறைகள், நிறம், மற்றும் பிராந்திய தாக்கங்களை அடையாளம் காண உதவுகிறது. 800ம் அதிகமான மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, விஷோநெக்ஸ்ட் தரவுத்தொகுப்பின் பகுதியாக அவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.