தமிழ்நாட்டில் மெகா ஜவுளிப்பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி

தமிழ்நாட்டில் மெகா ஜவுளிப்பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை  இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார். கோவையில் சைமா ஜவுளி கண்காட்சி தொடக்க விழாவில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளாக சேவை, நல்லாட்சி, ஏழைகள் நலன் என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது என்றார்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி  செய்யப்பட வேண்டும் என்ற பிரதமரின்  கனவை நினைவாக்கும் வகையில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். 

தமிழ்நாட்டில் மெகா ஜவுளி தொழில் பூங்கா அமைக்க அனுமதி அளித்ததற்கும், பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ததற்கும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அமைச்சர் எல் முருகன் குறிப்பிட்டார்.

கடந்த எட்டு ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளை புரிந்துள்ள  மத்திய அரசு, மேலும் பல சாதனைகளை படைக்க உள்ளது  என்றும், கொரோனா பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்க  காலத்திலிருந்து வரும் செப்டம்பர் மாதம் வரை, பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு உணவுத் திட்டத்தின் கீழ் 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டை தற்சார்பு அடைந்ததாக மாற்றுவது என்ற பிரதமரின் எண்ணத்திற்கு செயல்வடிவம் அளிப்பதில் பியூஷ் கோயல் முக்கிய பங்கு வகிப்பதாகவும்  இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்தார்.