2021 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ள 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான விதிமுறைகள் மற்றும் போஸ்டரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார். ஆசியாவின் பழமையான திரைப்பட விழாக்களில் ஒன்றும், இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவுமான இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 52-வது பதிப்பு, 51-வது பதிப்பின் வெற்றியை தொடர்ந்து கலப்பு முறையில் நடைபெறும். இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திரைப்பட விழாக்களின் இயக்குனரகத்தால் இது நடத்தப்படுகிறது. சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தால் இந்திய சர்வதேச திரைப்பட விழா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரை படைப்புகளை ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் இந்த விழாவானது, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து சிறந்த திரைப்படங்களை திரையிடுகிறது. 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் போட்டி பிரிவில் கலந்து கொள்வதற்காக 2021 ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம். இந்திய திரையுலக மேதையான திரு சத்யஜித் ரேவின் நூற்றாண்டை முன்னிட்டு, அவரது படங்களை இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்பட விழாக்களின் இயக்குனரகம் சிறப்பு அஞ்சலியை செலுத்துகிறது. மேலும், அவரது நினைவை போற்றும் விதமாக, ‘திரைத்துறையில் சிறந்து விளங்கியதற்கான சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது’ இந்த வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடர்ந்து வழங்கப்படும்.