சுற்றுலா மேம்பாட்டிற்காக மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி வேண்டுகோள்

சர்வதேச அளவிலான சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கு அதிகளவில் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கும், அங்குள்ள வசதி வாய்ப்புகளை அதிகரிக்கவும் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார். 

இன்று சென்னையில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை நிறுவனத்தில் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை, கலாச்சாரம், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், சுற்றுலாத்துறையில் மிகச்சிறப்பாக செயல்படும் சில மாநிலங்களில்  தமிழகமும் ஒன்று என்று குறிப்பிட்டார்.

மத்திய அரசு பல்வேறு பழமைவாய்ந்த கோயில்களை புதுப்பிக்கவும், புனரமைக்கவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு கூடுதல் நிதியை வழங்கி வருவதாகவும், அவற்றை பயன்படுத்தி கோயில்களை நல்லமுறையில் பராமரித்திட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொல்லியல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கலாச்சார சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கலாஷேத்ரா அறக்கட்டளை, நாட்டின் மிகவும் பழம்பெரும் கலாச்சார மையம் என்றும், நாட்டின் பெருமைக்குரிய நிறுவனமாக அது திகழ்கிறது என்றும் அமைச்சர் புகழாரம் சூட்டினார்.முன்னதாக கலாஷேத்ரா மையத்தின் கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த அவர், அந்நிறுவன மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி ஒன்றையும் கண்டுகளித்தார். பின்னர் கலாஷேத்ரா மைய மாணவ, மாணவியருடன் அவர் கலந்துரையாடினார்.