ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கான மின்னணு வாழ்நாள் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு முகாம் மதுரையில் நடைபெற்றது

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கான மின்னணு வாழ்நாள்  சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு முகாம் மதுரையில் இன்று நடைபெற்றது.  பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமினை பாரத ஸ்டேட் வங்கி, மதுரையின்  ஓய்வூதியதாரர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து மதுரையில் உள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை ஏற்பாடு செய்திருந்தது. 

இதனை பாரத ஸ்டேட் வங்கியின் மதுரை பகுதியின் உதவி பொது மேலாளர் திரு ஆனந்த் தொடங்கி வைத்தார். பாரத ஸ்டேட் வங்கியின் மதுரை மண்டல மக்கள் தொடர்பு மேலாளர் திருமதி ஹரினி, தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் சங்கத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் எஸ் சுகுமார், திரு வி எஸ் ராஜகோபால், முன்னாள் ஹவில்தார் கே நடராஜன், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் திட்ட மேலாளர் திரு நவ்சாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறையின்  தனிச் செயலாளர் திரு தீபக் புந்தீர், உதவி செயலாளர் திரு எஸ் சக்கரபர்த்தி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.  இந்த மின்னணு வாழ்நாள் சான்றிதழ் விழிப்புணர்வு முகாமில் மதுரை மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் பாதுகாப்புப் படையை சேர்ந்த ஏராளமான ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர். 

இதற்கிடையே நேற்று வரை (13.11.2022) 47,66,735 மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை  தெரிவித்துள்ளது.