மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முகாமில் 300-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர்

மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முகாம் சென்னை மேற்கு தாம்பரத்தில் நடைபெற்றது. பாரத ஸ்டேட் வங்கி ஏற்பாடு செய்திருந்த முகாமில் சென்னையில் உள்ள ஓய்வதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையைச் சேர்ந்த குழுவினர் இடம் பெற்றனர்.

இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர். 3 ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களுடைய செல்போனில் ஜீவன் பிரமாண் செயலியை  பதிவிறக்கம் செய்து அதன் மூலம் வாழ்நாள் சான்றிதழை துறை அதிகாரிகள் வழங்கி உதவினார்கள்.  சென்னையில் உள்ள அகில இந்திய  ஓய்வூதியதாரர்கள் சங்க கூட்டமைப்பு முகாமில் கலந்து கொண்டு புதிய தொழில்நுட்ப முறையை பயன்படுத்துவது குறித்து தெரிந்துகொண்டனர். இந்த புதிய தொழில்நுட்ப முறையில் 60 வினாடிகளுக்குள் செல்போன் மூலம் வாழ்நாள் சான்றிதழ் பெறமுடியும். மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளில்,  இது டிஜிட்டல் உலகில் ஒரு மைல்கல்லாகும். முன்னதாக, வங்கிகளில் நேரடியாக வாழ்நாள் சாதனைகளை பெறுவதற்கு வயதான ஓய்வூதியதாரர்கள் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. தற்போது அவர்கள் வசதியாக வீட்டிலிருந்தபடியே பொத்தானை அழுத்தி அந்த சான்றிதழைப் பெறமுடியும்.

வாழ்நாள் சான்றிதழை பெறுவது குறித்து துறையின் சார்பில், 2 வீடியோ பதிவுகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. DOPPW_INDIA OFFICIAL என்ற முகவரியில் வாழ்நாள் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பதற்கான முறைகள் இடம் பெற்றுள்ளதாகவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.