இந்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் கட்டமைப்புப் பொறியியல் ஆய்வு மையம் ஏற்பாடு செய்துள்ள “ஒரு வாரம், ஒரு ஆய்வகம்” இயக்கத்தின் சார்பில் எதிர்கால தொழில்முனைவோர் இணைப்பு நிகழ்ச்சி

ஒரு வாரம், ஒரு ஆய்வகம் என்ற தேசிய அளவிலான இயக்கம் நாடு முழுவதும் இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலால் அதன் 37 ஆய்வகங்களில் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள கட்டமைப்பு பொறியியல் ஆய்வு மையத்தில் (சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி) இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2023, ஜூன் 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இயக்கத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள்  சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி-யின் நிறுவன தினமான ஜூன் 10-ம் தேதி நடைபெறுகிறது. சமூக இணைப்பு, மாணவர் இணைப்பு, பொதுமக்கள் இணைப்பு, எதிர்கால தொழில்முனைவோர் இணைப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம், ஒரு ஆய்வகம் இயக்கத்தின் நான்காம் நாளான நேற்று (08.06.2023) எதிர்கால தொழில்முனைவோர் இணைப்பு இயக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள 6 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 35 பி.இ. / பி.டெக். இறுதியாண்டு கட்டுமானப் பொறியியல் மாணவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் என் ஆனந்தவள்ளி, இன்றைய மாணவர்கள்  வளரும் தொழில்முனைவோர்களாக உள்ளனர் என்று கூறினார். வாழ்வில் கட்டுமானப் பொறியியலின் முக்கியத்துவம் குறித்து அவர் எடுத்துரைத்தார். கட்டுமானப் பொறியியல் துறையில் தொழில்முனைவோர் தெளிவானப் பார்வையுடன் முன்னேற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி-ன் முதன்மை விஞ்ஞானி டாக்டர் கே சத்தீஷ்குமார், எதிர்கால  தொழில்முனைவோர் இணைப்பு நிகழ்ச்சியின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார். இளம் மாணவர்கள், எதிர்கால தொழில்முனைவோர்களாகவும் புத்தொழில் நிறுவனங்களை உருவாக்குபவர்களாகவும் வளர வேண்டும் என்ற  நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாகத்  தெரிவித்தார். பிற்பகல் அமர்வின்போது இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் நவீன பொருட்கள் ஆய்வகம், நவீன கட்டுமான சோதனை மற்றும் ஆய்வு மையம், காற்று பொறியியல் ஆய்வகம் உள்ளிட்டவற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.