“மர்மர்” திரைப்பட விமர்சனம்

பிரபாகரன் தயாரிப்பில் ஹேம்நாத் இயக்கத்தில் ரிச்சி கபூர், தேவவராஜ் ஆறுமுகம், சுகன்யா சண்முகம், யுவ்கா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மர்மர்”. திருவண்ணாமலை மாவட்டத்திலிருக்கும் ஜவ்வாது மலை கிராமத்தில் பெளர்ணமி நிலவொளியில் 7கன்னிப்பெண்கள் குளத்தில் நீராட வருவதாகவும், அந்த்க கன்னி பெண்களுக்கு அந்த கிராமத்து மக்கள் பூஜை செய்வதாகவும் ஆனால் அந்த பூஜையை செய்யவிடாமல் ஒரு சூனியக்காரியின் ஆவி மக்களை பலிவாங்குவதாகவும் நகரத்தில் வாழும் நான்கு இளைஞர்கள் கேள்விபடுகிறார்கள். இது உண்மையா அல்லது வெறும் கட்டுக்கதையா என்பதை கண்டுபிடிப்பதற்காக ஜவ்வாது மலைக்கு வருகிறார்கள். அவகளுக்கு வழிகாட்டியாக அக்கிராமத்திலிருக்கும் ஒரு பெண்ணும் இவர்களுடன் சேர்ந்து காட்டுக்குள் செல்கிறார்கள். காட்டுக்குள் சென்றவர்கள் என்ன ஆனார்கள்? என்பதுதான் கதை. மற்ற பேய்படங்களைவிட இந்த பேய் படம் முழுவதும் வித்தியாசமானது. மற்ற பேய் படங்களில் பின்னணி இசைதான் பார்வையாளர்களை அச்சுறுத்தி மிரட்டும். ஆனால் இந்தப்படத்தில் செயற்கையான பின்னணி இசை எதுவும் இல்லை. காட்டில் இயற்கையாகவே ஒலிக்கும் சப்தங்களை வைத்தே பார்வையாளர்களை மிரள வைத்திருக்கிறார் இயக்குநர் ஹேம்நாத். உணமைக்கு நெருக்கமாகவே திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள். அதனால் படத்தை ரசிக்க முடிந்தாலும், சில ஆபாச காட்சிகளும் ஆபாச வசனங்களும் “சீச்சீ” என்று முகம் சுளிக்க வைக்கின்றன. அமானுஷ்யத்தை காணும்போதும் அதன் ஒலியை கேட்கும்போதும் முகபாவனைகள் இயற்கையாகவே பயமுறுவதுபோன்று நடித்திருப்பது பாராட்டும்படி இருக்கிறது. அந்த பயத்தை படம் பார்ப்பவர்களும் உணரும்படி நடித்திருக்கிறார்கள். மிக அருமையாக நடித்திருக்கிறார் ரிச்சி கபூர். சில காட்சிகள் தேவையில்லாமல் நீண்டு கொண்டே போனாலும், படத்தொகுப்பாளர் ரோஹித் பணி பாராட்டும்படி இருக்கிறது. படத்தின்  பெறும்பகுதி இரவு நேரத்து இயற்கையான நிலா வெளிச்சத்திலும் கை மின்கல வெளிச்சத்திலும் (டார்ச் லைட்) படமாக்கி பாரவையாளர்களை மெய்மறக்க செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ். காற்றிலாடும் மரங்களின் சலசலப்பு ஓசையையும் காட்டுப்பூச்சிகளின் சப்தங்களையும் துல்லியமாக பதிவு செய்திருக்கும் ஒலி வடிவமைப்பாளர் கேவ்யன் பிரெடெரிக்கின் பணி ஆற்றல் மிக்கது. செயற்கை சிறிதுமின்றி அனைத்துக் காட்சிகளையும் இயற்கையாகவே படமாக்கியிருக்கும் இயக்குநர் ஹேம்நாத்தை கையொளி எழுப்பி வரவேற்க்க வேண்டும்.