நடிகர் தியாகராஜன் தயாரித்து இயக்கி வெளிவந்திருக்கும் படம் “அந்தகன்”. இப்படத்தில் பிரஷாந்த், கார்த்திக், யோகிபாபு, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் சமுத்திரக்கனி, மறைந்த மனோபாலா, சிம்ரன், ஊர்வசி, பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதைவிட கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். பிரஷாந்த் பியானோ வாசிப்பதில் வல்லவர். லண்டனில் உலகளவில் நடக்கவிருக்கும் பியானோ போட்டியில் கலந்து கொள்ள நினைக்கிறார். போட்டியில் குருடனாக நடித்து கலந்து கொண்டால் பார்வையாளர்களுக்கு தன்மீது இரக்கம் ஏற்பட்டு அதிகளவில் ரசிகர்கள் கிடைப்பார்கள் என்று கணக்குப்போட்டு குருடனாகவே நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் நிஜக்குருடனாகவே ஆகிவிடுகிறார். அவரை நிஜக்குருடனாக ஆக்கியது யார்? எதற்காக குருடனாக ஆக்கப்பட்டார்? லண்டனில் நடந்த பியானோ போட்டியில் கலந்து கொண்டாரா? என்பதை வெள்ளித்திரையில் காணலாம். முக்கிய கதாபாத்திரங்கள் பணத்துக்காக சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கதாபாத்திரங்கள்தான். புகழுக்காக குருடனாக நடிக்கும் பிரஷாந்த், பெண்ணாசையால் கொலை செய்யும் சமுத்திரக்க்னி, கிட்னித்திருடும் டாக்டராக கே.எஸ்.ரவிக்குமார், கொலைகாரியாக சிம்ரன், பித்தலாட்டம் செய்பவர்களாக ஊர்வசி, யோகிபாபு. எதிர்மறை காதாபாத்திரங்கள் அனைத்தும் பல மனிதர்களின் உள்ளத்தில் மறைந்து கொண்டிருக்கும் ஆசைகள்தான் . அந்த ஆசைகளுக்கு உருவம் கொடுத்து திரையில் நடமாடவிட்டிருக்கிறார் இயக்குநர் தியாகராஜன். அதிரடி திருப்பங்களும் ஆச்சிரியங்களும் படத்தில் நிறைந்திருப்பதால் சலிப்பு தட்டாமல் படத்தை ரசிக்க முடிகிறது. யதார்த்தவாதியான இயக்குநர் தியாகராஜன் பல மனிதர்களின் யதார்த்தத்தை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளார். பிரஷாந்தும் சிம்ரனும் ஒருவருக்கொருவர் போட்டிப்போட்டுப் நடித்துள்ளார்கள். உயிருக்கு பயந்து கழிவறைக்குள் ஒழிந்து கொண்டு சமுத்திரக்கனி வனிதாவிடம் கெஞ்சுவது அருமை ஐயா. அசத்திவிட்டீர்கள். கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக், ஊர்வசி, யோகிபாபு நால்வரும் தங்களின் கதாபாத்திரத்தை போகிறபோக்கில் சொடக்குப்போடுவவதைப்போல் போட்டு நடித்து விட்டார்கள். அனுபவம் அங்கே பேசியது. கவர்ச்சிக்காக மட்டுமே பிரியா ஆனந்த். படத்தின் அனைத்துக் கோணத்திலும் இயக்குநர் தியாகராஜன் தென்படுகிறார்.